2020-21ம் ஆண்டில் ரயில்வே பார்சல் மூலம் ரூ.1,000 கோடி வருவாய் கிடைக்கும்: இந்திய ரயில்வே அறிவிப்பு

சென்னை: பார்சல் மூலமாக 2020-21ம் ஆண்டில் ரயில்வேத்துறை ரூ.1,000 கோடி வருவாய் கிடைக்கும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய ரயில்வேயின் பார்சல் சேவைகள் பரந்த அளவில் உள்ளது. இது சிறு வணிகர்கள் மற்றும் வர்த்தகர்கள் ஆங்காங்குள்ள சிறிய, பெரிய நகரங்கள், உற்பத்தி மையங்கள் ஆகிய இடங்களில் இருந்து வணிகம் செய்யும் இடத்திற்கு விரைவாகவும், நம்பகமான மற்றும் மலிவான முறையில் பொருட்களை கொண்டு செல்வதற்கு இந்த சேவையை பயன்படுத்துகின்றனர். பார்சல்களுக்கான கட்டணம் எடை மற்றும் அளவில் மட்டுமே வசூல் செய்யப்படுகிறது.

பொருட்களில் வகையின் அடிப்படையில் வசூல் செய்யப்படுவதில்லை. இந்நிலையில்  ரயில்வேயின் பார்சல் மேலாண்மை அமைப்பின் கணினிமயமாக்கல் 84 இடங்களில்  இருந்து இரண்டாவது கட்டத்தில் 143 இடங்களுக்கும், மூன்றாவது கட்டத்தில் 523  இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. மேலும் பார்சல் அனுப்புவதற்காக www.parcel.indianrail.gov.in என்ற இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக பார்சல்  அனுப்புவதற்கு 120 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்துகொள்ளலாம்.  இடவசதி குறித்தும் அறிந்துகொள்ள முடியும். கணினிமயமாக்கப்பட்ட பார்சல் அலுவலகத்தில் தானாகவே பார்சலின் எடை கணக்கிடப்படும்.  

பார்சலை கண்காணிப்பதற்காக ஒவ்வொரு சரக்குகளிலும் பார்கோடிங் வசதி  செய்யப்பட்டுள்ளது. பார்சல் முன்பதிவு, ஏற்றுதல், இறக்குதல் ஆகியவற்றிலிருந்து ஒவ்வொரு கட்டத்திலும் வாடிக்கையாளர்களுக்கு (அனுப்புநர் மற்றும் பெறுநர்) எஸ்எம்எஸ் அனுப்பப்படும். பார்சல் போக்குவரத்து 2020-21ம் ஆண்டில்  (ஜனவரி வரை) 2,098 ஆயிரம் டன்னாக உள்ளது. கோவிட் பாதிக்கப்பட்ட நிலையிலும்  கூட இதன் மூலம் ரயில்வேயின் வருவாய் ரூ.1,000 கோடியை கடக்கும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>