×

திமுக தேர்தல் அறிக்கை ஆசிரியர்கள், சத்துணவு, கோயில் பூசாரிகள் சங்கங்கள் வரவேற்பு

சென்னை: 38 ஆண்டுகளுக்கு மேலாக உத்தரவாதம் இல்லாத ஊதியம் பெற்ற சத்துணவு அமைப்பாளர்களுக்கு விடிவு ஏற்பட்டுள்ளது என்றும், திமுக ஆட்சி அமைய 7 லட்சம் பூசாரிகள் உறுதியேற்போம் எனக்கூறி திமுக தேர்தல் அறிக்கைக்கு அரசு ஆசிரியர்கள், சத்துணவு, கோயில் பூசாரிகள் சங்கங்கள் வரவேற்பு அளித்துள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு தலைவர் சா.அருணன் :தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் நீண்டநாள் கோரிக்கையான புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவோம் என அறிவித்திருப்பதை வரவேற்று மகிழ்ச்சி அடைகின்றோம். அங்கன்வாடி பணியாளர்களை காலமுறை ஊதியத்தில் கொண்டுவந்து பணி நிரந்தரம் செய்வோம் என அறிவித்திருப்பதும் வரவேற்கத்தக்கது.

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மு.வரதராஜன்: சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மனம் மகிழும் வகையில் திமுக தேர்தல் அறிக்கையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு கால முறை ஊதியம் வழங்கிடுவோம் எனவும், ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கிடுவோம் என்ற அறிவிப்பை தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு வரவேற்கிறது.

கோயில் பூசாரிகள் நலச் சங்க தலைவர் பி.வாசு : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், கிராம கோயில் பூசாரிகளுக்கு மாத ஊதியம் வழங்கப்படும் என்று கூறியுள்ளது. மேலும், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ் ஏற்கனவே முறையான பயிற்சி பெற்று 14 ஆண்டுகளாக வேலையின்றி காத்திருக்கும் 225 பூசாரிகளுக்கு திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும்.திருக்கோயில்களை சீரமைக்க ₹1000 கோடியில் ஒதுக்கீடு செய்யப்படும்.

மலைக்கோயில்களில் பக்தர்கள் எளிதில் சென்று வழிபாடு செய்ய ரோப் கார் வசதி செய்யப்படும் என்று மகிழ்ச்சியான செய்தியையும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.கிராம  கோயில் பூசாரிகளின் நலனில் மிகவும் அக்கறை கொண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள அறிக்கைகள் வரவேற்புக்கு உரியவை. எனவே, வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுகவை ஆட்சிக்கட்டிலில் ஏற்ற 7 லட்சத்திற்கும் மேற்பட்ட பூசாரிகள் அனைவரும் இந்த நன்னாளில் உறுதி ஏற்போம்.

Tags : DMK ,Teachers ,Nutrition ,Temple Priests Associations , DMK Election Report Teachers, Nutrition, Temple Priests Associations Welcome
× RELATED பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம்