×

கொரோனா விதிமுறை மீறிய 5 கடைகளுக்கு சீல்-கலெக்டர் கதிரவன் அதிரடி

ஈரோடு : ஈரோட்டில்  கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றாத ஓட்டல், காய்கறி கடைகள் உள்ளிட்ட 5  கடைகளுக்கு சீல் வைக்க கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டார்.    கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்  உள்ள கடைகள், பஸ் ஸ்டாண்டு, காய்கறி சந்தை, ஓட்டல்கள் மற்றும்  துணிக்கடைகளில் நேற்று கலெக்டர் கதிரவன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.  

ஆய்விற்கு பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மாவட்ட நிர்வாகத்தின்  சார்பில், கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து பல்வேறு முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பொது இடங்களில் சமூக  இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும்  என அறிவுறுத்தப்பட்டும், அதை மீறுவோர் மீது அபராதம் விதிக்கப்பட்டு,  சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

ஈரோடு  மாநகராட்சிக்குட்பட்ட காய்கறி சந்தையில் உள்ள கடைகள் மற்றும் உணவு  விடுதிகள் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், அரசின் கொரோனா பாதுகாப்பு  விதிமுறைகளை பின்பற்றாமல், இயங்கி வந்த ஓட்டல்கள் மற்றும்  கைவினைபொருட்கள் அங்காடி உள்ளிட்ட 5 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, தலா  ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது.

தற்போது, நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில், பொதுமக்கள் அரசின் வழிகாட்டு  நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். வணிக வளாகங்கள், அங்காடிகள், காய்கறி சந்தை  உள்ளிட்ட பொது இடங்களுக்கு வரும் போது, முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.  

மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அரசின் விதிமுறைகளை  பின்பற்றாத வணிக நிறுவனங்கள் சீல் வைக்கப்படும். பொது இடங்களுக்கு முக  கவசம் அணியாமல் வரும் தனி நபருக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும்.  தொடா்ந்து முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், அரசின்  விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு  கலெக்டர் கதிரவன் கூறினார்.

Tags : Kadiravan , Erode: Collector to seal 5 shops in Erode, including hotels and vegetable shops, which do not follow corona prevention measures.
× RELATED ஈரோட்டில் வாரத்தின் அனைத்து...