×

வடகிழக்கு டெல்லி கலவர விவகாரம்: சட்டசபையில் ஆம்ஆத்மி-பாஜ மோதல்: பாஜ எம்எல்ஏ அவையிலிருந்து வெளியேற்றம்

புதுடெல்லி: கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்த வடகிழக்கு  டெல்லி கலவரத்தின் பின்னணியில்  அரசியல் கட்சியின் பங்கு இருப்பதாக ஆளும் கட்சி  எம்.எல்.ஏ அமந்துல்லா கான் குற்றம் சாட்டியதை அடுத்து, ஆம் ஆத்மி கட்சி  மற்றும் பாஜ உறுப்பினர்களிடையே டெல்லி சட்டமன்றத்தில் நேற்று காரசாரமான விவாதம் அரங்கேறியது. டெல்லி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்றைய கூட்டத்தின் போது, சட்டப்பேரவை சிறுபான்மை நலக் குழுவின் தலைவரும் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏவுமான அமனதுல்லா கான், கடந்த ஆண்டு நடந்த வடகிழக்கு டெல்லி வகுப்புவாத கலவரத்தால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கியதற்கான அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றினார். அப்போது வடகிழககு டெல்லி கலவரத்தின் பின்னணியில் அரசியல் கட்சியின் பங்கு இருப்பதாக குற்றம்சாட்டி பேசினார்.

ஆனால், கான் பேசிய கட்சிகுறித்த குறிப்புகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்கிய சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல், இழப்பீடு அறிக்கை குறித்து 5 நிமிடங்கள் பேச கானுக்கு அனுமதி வழங்கினார்.எனினும், அமனதுல்லாகானின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜ எம்எல்ஏக்கள் கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட சாபாநாயகர் கோயால் அவையில் அமைதியை நிலைநாட்ட முயற்சி செய்து பாஜ எம்எல்ஏ அனில் பாஜ்பாயை அவையில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்டார். அதன்பேரில் பாஜ்பாய் வெளியேற்றப்பட்டார். அதோடு நேற்றைய நாள் முழுவதும் பாஜ்பாய் அவையில் பங்கேற்க தடைவிதித்ததோடு, கான் அறிக்கையை மீதான உரையை நிறுத்துமாறு கூறி அவையை 15 நிமிடங்களுக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார். பின் அவை நடவடிக்கைகள் தொடங்கிய போது, பாஜ எம்எல்ஏ பாஜ்பாயை அவை நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதிக்குமாறு எதிர்கட்சி தலைவர் ராம்விர் சிங் பிதூரி சாபாநாயகரை கேட்டுக்கொண்டார். இதையடுத்து, கான் தெரிவித்த கருத்துக்களை அவை குறிப்பில் இருந்து நீக்கியதோடு, பாஜ்பாய்க்கு அனுமதி அளித்து, அவையில் அமைதியை கடைபிடிக்க பாஜ்பாய்க்கு அறிவுரை வழங்கினார்.

பின்னர் கான் தனது பேச்சை தொடர்ந்தார். அப்போது, மீண்டும் பாஜ கட்சியின் மீது கடும் தாக்குதல்களை தொடுத்தார். இதனால் பாஜ எம்எல்ஏக்கள் மீண்டும் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், கருத்துக்களை கவனமாகவும், அறிக்கையில் உள்ளவற்றை பற்றி மட்டுமே பேசுமாறு கானுக்கு அறிவுறுத்தினார். இதனால் சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.பின்னர் அவையைவிட்டு வெளியே வந்த கான், செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘‘சட்டப்பேரவையில் நான் பேசுகையில், பாஜவின் விருப்பத்தின்பேரிலேயே கலவரம் நடத்தப்பட்டது என்று கூறினேன்”என்றார். அதோடு, பாஜவின் கபில் மிஸ்ரா, ராகினி திவாரி மற்றும் பிற தலைவர்கள், அமைச்சர்கள் பெயர்களையும் கான் குறிப்பிட்டார்.

பின்னர் கான் தெரிவித்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்த டெல்லி பாஜ தலைவர் ஆதேஷ்குப்தா, ‘‘கான் மற்றும் கவுன்சிலர் தாகிர் உசேன் போன்ற ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் தான் டெல்லி கலவரங்களுக்குப் பின்னால் இருந்தனர் என்பதை போலிசாரின் விசாரணை அறிக்கை தெளிவாக காட்டுகிறது. உண்மையில் பாஜ தலைவர்கள் கலவரத்தின் போது மக்களை பாதுகாக்கவும், அவர்களுக்கு உதவிகள் மட்டுமே செய்தனர். ஆனால், ஆம் கட்சியினர் இந்த விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பது துரதிஷ்டவசமானது” என்றார்.


Tags : Northeast Delhi ,Bazja ,MLA , North East Delhi riots: Aam Aadmi Party-BJP clash in Assembly: BJP MLAs expelled from Assembly
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...