×

தற்போதைய அமைச்சர்கள் 3 பேருக்கு அதிமுகவில் சீட் கிடைக்கவில்லை ஏன்? பரபரப்பு தகவல்கள்

சென்னை: தமிழக 177 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. எனினும் அதிமுக வேட்பாளர் பட்டியலில், தற்போது அமைச்சர்களாக உள்ள 30 பேரில் 3 அமைச்சர்களுக்கு மீண்டும் போட்டியிட சீட் வழங்கப்படவில்லை. அதன்படி கதர் துறை அமைச்சர் பாஸ்கரன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோருக்கு சீட் வழங்கப்படவில்லை. அதேபோன்று தற்போது எம்எல்ஏக்களாக உள்ள 48 பேருக்கும் சீட் கிடைக்கவில்லை.3 அமைச்சர்களை தவிர 27 அமைச்சர்கள் மிகவும் முக்கியமான இலாகாக்களை கவனித்து வந்தனர். இதனால் அந்த துறைகளில் கோடிக்கணக்கில் பணம் கொட்டியது.

இதன்மூலம் அமைச்சர்கள் ஆண்டுக்கு ரூ.100 கோடி முதல் ரூ.1000 கோடி வரை சம்பாதித்ததாக கூறப்படுகிறது. இப்படி கோடிகளை சம்பாதித்த அமைச்சர்களுக்கு மீண்டும் சீட் வழங்கினால்தான் வெற்றிபெற முடியும் என்று அவர்களுக்கு மீண்டும் சீட் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சீட் வழங்காத பாஸ்கரன், நிலோபர் கபில், வளர்மதி ஆகிய அமைச்சர்கள் பெரிய அளவில் எந்த வருமானமும் இல்லாத துறையை கவனித்து வந்தனர். இவர்களுக்கு மீண்டும் சீட் வழங்கினால், தொகுதிக்கு பெரிய அளவில் செலவு செய்ய முடியாது. அப்படி செலவு செய்யாவிட்டால் வெற்றிபெற முடியாது என்ற காரணத்தினால்தான் அவர்களுக்கு மீண்டும் வழங்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோன்று தற்போது எம்எல்ஏளாக இருந்தவர்களில் 48 பேரின் நிலையும் இதுதான். 3 பேர் டிடிவி.தினகரனுக்கு ஏற்கனவே ஆதரவு தெரிவித்தவர்கள். அதனால் அவர்களுக்கு சீட் வழங்கப்படவில்லை. மற்ற எம்எல்ஏக்கள் மிகவும் வறட்சியாக உள்ளனர். அதனால் அந்த தொகுதியில் பணம் நடமாட்டம் அதிகம் உள்ள முன்னாள் அமைச்சர்கள், ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டவர்களுக்கு மீண்டும் சீட் வழங்கப்பட்டுள்ளது. இனிமேல் அதிமுக கட்சிக்கு உழைத்தவர்களுக்கு சீட் வழங்கும் பழக்கம் கைவிடப்பட்டு, பணம் இருந்தால் மட்டுமே சீட் என்ற நிலையை தற்போதைய தலைமை உருவாக்கியுள்ளது.


Tags : AIADMK , Why 3 current ministers do not get seats in AIADMK? Sensational information
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...