×

ஊழலற்ற பாஜக தான் இனி வளரும்: அமமுக கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த நடிகர் செந்தில் பேட்டி..!

சென்னை: பாஜக மாநில தலைவர் எல்.முருகன் முன்னிலையில்  நகைச்சுவை நடிகர் செந்தில் இணைந்துள்ளார். அதிமுக, அமமுக கட்சியில் இருந்த நடிகர் செந்தில் தற்போது தமிழக தேர்தல் பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி , மாநில பொதுச் செயலாளர் திரு கே டி ராகவன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். ஜெயலலிதா இருந்தபோது அதிமுகவில் நட்சத்திர பேச்சாளராக இருந்தார் நடிகர் செந்தில். தேர்தல் நேரங்களில் தமிழகமெங்கிலும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து அக்கட்சிகாக தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தார்.

ஆனால் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு அதிமுகவை விட்டு விலகிய அவர் அமமுகவில் அமைப்பு செயலாளராக இருந்தார். ஆனபோதிலும் அக்கட்சியின் செயல்பாடுகள் தனக்கு பிடிக்காததால் கட்சி கூட்டங்களில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார். அதனால் கடந்த ஆண்டில் அவரை கட்சியில் இருந்து நீக்கினார் டிடிவி.தினகரன். இந்த நிலையில், இன்றைய தினம் அவர் தமிழக பா.ஜ., தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பா.ஜ.க.,வில் இணைந்திருக்கிறார். இதையடுத்து செந்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது; 1988ல் இருந்து நான் அதிமுகவில் இருந்து வந்தேன். ஜெயலலிதா இறந்த பிறகு எந்த கட்சிக்கு செல்வது என தெரியவில்லை.

ஒரு நல்ல கட்சியில் சேர வேண்டும் என்று காத்திருந்தபோது தான் பாஜக நல்ல கட்சி என்பதை அறிந்து அக்கட்சியில் இணைந்திருக்கிறேன். பாஜக தான் இனி வளரும், வேறு எந்த கட்சிகளையும் மக்கள் நம்ப மாட்டார்கள். பாஜக ஊழலற்ற கட்சியாக உள்ளது. ஊழல் செய்பவர்களை தட்டிக் கேட்கிறார்கள். அதனால் இந்த கட்சி தமிழகத்தில் அழுத்தமாக காலூன்றும். ஜெயலலிதா சேவல் சின்னத்தில் போட்டியிட்டபோதில் இருந்தே நான்தான் பிரச்சாரம் செய்து வந்தேன். ஆனால் அக்கட்சியில் இப்போது இருப்பவர்களை ஏனோ எனக்கு   பிடிக்கவில்லை. அதனால் அக்கட்சியில் இருந்து ஒதுங்கி விட்டேன் என்றார்.

Tags : AMAA ,PJAGA ,Sentle , Corrupt BJP will only grow: Actor Senthil interviewed, who left the AIADMK and joined the BJP ..!
× RELATED மின்தடை ஏற்பட்டுள்ள இடங்கள் இன்று...