×

தொகுதி அந்தஸ்து போனதால் ஜொலிக்காத பனமரத்துப்பட்டி: 10 வருஷம் வீணாப்போச்சு என மக்கள் புலம்பல்

சேலம்:‘ நான் பனமரத்துப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பேசுகிறேன்’ என்று 2006ம் ஆண்டுவரை சட்டப்பேரவையில் ஓங்கி ஒலித்த குரல்கள் ஏராளம். ஆனால் 2011ம் ஆண்டில் இருந்து இப்படி ஒரு குரல் அங்கு ஒலிக்கவில்லை. அதே  நேரத்தில் கடந்த 10 ஆண்டுகளில் எங்கள் பகுதியும் ஜொலிக்கவில்லை’’ என்று அதிருப்தியால் அதிரவைப்பவர்கள் பனமரத்துப்பட்டி மக்கள். மலைகளும், ஆறுகளும், நீர்நிலைகளும் நிறைந்த வளமான பகுதி. பூக்கள் சாகுபடியில் சேலத்தின் கேந்திரம். விவசாயத்தில் தன்னிறைவு திட்டங்களுக்கு அடித்தளமிட்ட கிராமங்கள் என்று தனிச்சிறப்பு பெற்றது பனமரத்துப்பட்டி. இது கடந்த கால தேர்தல்களில் சேலம் மாவட்டத்தின் பிரதான தொகுதிகளில் ஒன்றாக இருந்தது. 1967ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பனமரத்துப்பட்டி தொகுதியில் அதே ஆண்டில் திமுக சார்பில் போட்டியிட்ட பொன்னுமலை வெற்றி பெற்றார்.

1971 தேர்தலிலும் திமுக சார்பில் போட்டியிட்ட பொன்னுமலை வெற்றி பெற்றார். இதையடுத்து 1977ல் சுப்பராயன் (அதிமுக), 1980ல் கே.ராஜாராம்(அதிமுக), 1984ல் கே.ராஜாராம் (அதிமுக), 1989ல் எஸ்.ஆர்.சிவலிங்கம் (திமுக), 1991ல் கே.ராஜாராம் (அதிமுக), 1996ல் எஸ்.ஆர்.சிவலிங்கம் (திமுக), 2001ல் விஜயலட்சுமி பழனிசாமி (அதிமுக), 2006ல் ஆர்.ராஜேந்திரன் (திமுக) ஆகியோர் வெற்றி பெற்றனர். 2008ம் ஆண்டு தேர்தல் ஆணையம் வெளியிட்ட மறுசீரமைப்பு உத்தரவால் பனமரத்துப்பட்டி சட்டமன்றத்  தொகுதி இல்லாமல் போனது. இந்த தொகுதியில் இடம் பெற்றிருந்த பகுதிகள் வீரபாண்டி சட்டமன்றத் தொகுதியோடு இணைக்கப்பட்டது.

பனமரத்துப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராஜாராம் தமிழக சபாநாயகராகவும், அமைச்சராகவும் பணியாற்றினார். அதே போல் இங்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜயலட்சுமி பழனிசாமியும் அமைச்சர் பொறுப்பு வகித்தார். 2006ல் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வழக்கறிஞர் ராஜேந்திரனை, இன்றும் மக்கள் ‘பனமரத்துப்பட்டி ராஜேந்திரன்’ என்று அன்புடன் அழைப்பது இந்த தொகுதியின்  பெருமைக்கு மகுடமாக திகழ்கிறது. தற்போதைய பனமரத்துப்பட்டி. பேரூராட்சியாக திகழ்கிறது. 15வார்டுகள் உள்ளன. இதுதவிர பனமரத்துப்பட்டி வட்டாரமானது அமானி கொண்டலாம்பட்டி, அம்மாபாளையம், தாசநாயக்கன்பட்டி, வாணியம்பாடி, கெஜல்நாயக்கன்பட்டி, கம்மாளப்பட்டி, குரால்நத்தம், மூக்குத்தி பாளையம், நாழிக்கல்பட்டி, நெய்க்காரப்பட்டி, நிலவாரப்பட்டி, பள்ளித்தெருபட்டி, பாரப்பட்டி, பெரமனூர், சந்தியூர், சந்தியூர் ஆட்டையாம்பட்டி, தம்மநாயக்கன்பட்டி, திப்பம்பட்டி, தும்பல்பட்டி, வாழக்குட்டப்பட்டி என்று 20 கிராமங்களை உள்ளடக்கியது.

  இதில் பனமரத்துப்பட்டியின் இதயமாக திகழ்வது 2,400 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி. ஒரு காலத்தில் சேலம் மாநகருக்கே குடிநீர் வழங்கிய பெருமை இதற்கு உண்டு. அது மட்டுமல்ல, பல திரைப்படங்களில் இயற்கை எழில் சூழ்ந்த பின்னணியில் காட்சிகள் இங்கு படம் பிடிக்கப்பட்டுள்ளது. முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆர், படப்பிடிப்புக்காக இங்கு தங்கியிருந்த அறை, எம்ஜிஆர் ஹவுஸ் என்று இன்றும் அழைக்கப்படுகிறது. அந்த அறை இப்போது சிதிலமடைந்து புதராக கிடக்கிறது. ஏரியின் நீர்வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகள் சூழ்ந்து  கொண்டதால் நீர்வரத்து அறவே இல்லாமல் போனது. அதே நேரத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அரசு மற்றும் அதிகாரிகளின் பாராமுகத்தால் இப்போது சீமைக்கருவேல மரங்கள் முளைத்து முட்புதராக காட்சியளிக்கிறது.

எப்படி இந்த ஏரி வறண்டு பரிதாபமாக காட்சி அளிக்கிறதோ, அதே போன்ற நிலையில் தான் ஊரின் வளர்ச்சியும் உள்ளது. சட்டமன்றத் தொகுதி என்ற அந்தஸ்து இருந்தபோது, அதை கருத்தில் கொண்டு பல பணிகளுக்கும், வளர்ச்சி திட்டங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆனால் தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு, 2011 தேர்தலில் பனமரத்துப்பட்டி என்பது அரசியல் கட்சிகள் உச்சரிக்க மறந்த பெயராக மாறி நிற்கிறது. இப்படிப்பட்ட நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக தொகுதியில் வெற்றி பெற்ற ஆளுங்கட்சி வேட்பாளர்களும் இந்த பகுதியை கண்டு கொள்ளாதது எங்கள் துரதிர்ஷ்டம். நிச்சயம் வரும் தேர்தலில் இதற்கு பதிலடி கொடுப்போம் என்ற குமுறல் இங்குள்ள மக்கள் மனதில் பலமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.

ஓட்டுக்கேட்க வந்த போது எம்எல்ஏவை பார்த்தோம்
‘‘பனமரத்துப்பட்டி பகுதி இப்போது வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்குள் இருக்கிறது. இந்த பகுதிக்கு தற்போது எம்எல்ஏவாக இருக்கும் மனோன்மணி, 5 வருஷத்துக்கு முன்னாடி ஓட்டு  கேட்க வந்தாரு. அப்போது பல வாக்குறுதிகளை கொடுத்தாரு. வெற்றி பெற்ற பிறகு இந்தபக்கம் அவர் தலைகாட்டவே இல்லை. அவர் இருக்கும் பகுதிக்கு நாங்கள் தேடிச்சென்றாலும் எங்களால் பார்க்க முடியாது. அதற்கு முன்பும் அதிமுகவின் கைவசம் தான் தொகுதி இருந்தது. அப்போதும் எதுவும் நடக்கவில்லை. இப்படி 10 வருஷம், ஒரு கட்சிக்கு வாக்களித்து வீணாக்கி விட்டோம் என்ற குற்ற உணர்வு, எங்களுக்கு உள்ளது. அதற்கு ஆறுதல் அளிக்கும் வகையில் நடப்பு தேர்தல் முடிவுகள் இருக்கும்,’’ என்பது மக்களின் மனநிலை உணர்த்தும் இளைஞர் ராஜமணிகண்டனின் குமுறல்.

இருக்கு.. ஆனால்இல்லை...
* மலைகள் இருக்கு, பச்சை பசும் வயல்வெளிகள் இருக்கு. இயற்கை வளம் இருக்கு. ஆனால் சுற்றுலாத் தலமாக்கும் முயற்சிகள் மட்டும் இல்லை.
* சாமந்தி, சம்பங்கி, அரளி, மல்லிகை என்று ஏராளமான பூக்களின் சாகுபடி இருக்கு. ஆனால் அதை பத்திரப்படுத்தி, சந்தைப்படுத்த தேவையான குளிர்பதன கிடங்குகள் இல்லை.
* கத்திரி, வெண்டை, அவரை, பயறு வகைகள் என்று அனைத்தும் விளைந்து இருக்கு. ஆனால் அதை உரிய நேரத்தில் எடுத்துச் சென்று விற்பதற்கான உழவர் சந்தை இல்லை.
* ஒரு காலத்தில் சேலத்திற்கே நீர் தந்த பரந்து விரிந்த ஏரி இருக்கு. ஆனால் அதை சூழ்ந்துள்ள அவலங்களை அகற்றி சீரமைப்பதற்கான நடவடிக்கை இல்லை.
* ஆயிரக்கணக்கான மக்களின் பயன்பாட்டுக்காக பேரூராட்சியில் ஒரு ஆஸ்பத்திரி இருக்கு. ஆனால் அதில் போதிய வசதிகளோ, மருத்துவர்களோ இன்றுவரை இல்லை.

Tags : Panamarattupatti , Block status, unlit, palm tree, 10 years wasted
× RELATED வீணாக போகிறது 2,400 ஏக்கர் நீர் பொக்கிஷம்...