234 தொகுதியிலும் தேமுதிக தனித்து போட்டி? விஜயகாந்த் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை: வேட்பாளர் தேர்வை தீவிரப்படுத்த உத்தரவு

சென்னை: அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில் 234 தொகுதியிலும் தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டணி அமைப்பதா என்பது குறித்து விஜயகாந்த் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதற்கிடையே, அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்கள் தேர்வை தீவிரப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.  தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. இதனால் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு என அனைத்து கட்சிகளிலும் தேர்தல் களம் அனல் பறக்கிறது. அதிமுக கூட்டணியில் தேமுதிக 41 இடங்களை எதிர்பார்த்தது. ஆனால் வெறும் 13 தொகுதிகள் தான் ஒதுக்க முடியும் என கறாராக சொல்லிவிட்டனர். இந்நிலையில் அனைத்து கட்சிகளிலும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு முடிந்துவிட்டது. அதிமுக, அமமுக, மநீம,பாமக, பாஜ ஆகிய கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. எனவே, அதிர்ச்சி தரும் வகையில் இந்த தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. அதற்கு காரணம், மக்கள் நீதி மய்ய கூட்டணியில் இருந்து தேமுதிகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆனால் அதை தேமுதிக ஏற்றுக் கொள்ளவில்லை. அதே சமயம் அமமுக கூட்டணியில் இடம் பெற வாய்ப்புள்ளதா என கணக்கிட்டால் டிடிவி.தினகரன் தனது கட்சிக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டார். நிலமை இப்படி இருப்பதால் தேமுதிக தனித்து போட்டியிடும் நிலை தான் ஏற்பட்டுள்ளது. எனவே 234 தொகுதிகளிலும் தேமுதிக தனித்தே களம் காண உள்ளதாக தேமுதிக வட்டாரங்கள் கூறி வருகிறது. இந்நிலையில், சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதா? அல்லது கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதா என்பது குறித்து விவாதிக்க விஜயகாந்த் தனது கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை அழைத்தார். அவர்களுடன் நேற்று தீவிர ஆலோசனை நடத்தினார்.

எந்த மாதிரியான முடிவை எடுத்தால் தேமுதிகவை இந்த தேர்தலில் முன்னிலைப்படுத்த முடியும் என்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தேமுதிக நிர்வாகி ஒருவர் கூறினார்.  இதற்கிடையே, 234 தொகுதிகளிலும் தேமுதிக போட்டியிடும் வகையில் அனைத்து தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளை தீவிரப்படுத்தவும் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் தேமுதிக எந்த மாதிரியான முடிவை எடுத்துள்ளது என்ற எதிர்பார்ப்பு அரசியல் தலைவர்களிடையே ஏற்பட்டுள்ளது.

Related Stories:

More
>