×

மத்தியில் பாஜ தலைமையில் ஆட்சி அமைந்த பின் பொருளாதாரத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை: ராமலிங்கரெட்டி குற்றச்சாட்டு

பெங்களூரு: மத்தியில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்த நாள் முதல் பொருளாதார நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என காங்கிரஸ் செயல்தலைவர் ராமலிங்கரெட்டி குற்றம் சாட்டினார். இது குறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ``நாட்டில் கடந்த 50ஆண்டுகளுக்கு பின் இப்போது தான் அதிகம் வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தில் நாட்டில் தொழில் புரட்சி ஏற்படுத்துவதாக கூறி 7 ஆண்டு பதவி காலத்தில் முக்கால்பகுதியை வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் மோடி கழித்து விட்டார். அவரின் தவறான கொள்கையால் வேலையில்லாத திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது.

மத்தியில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்த நாள் முதல் நாட்டின் பொருளாதார நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. நிதி நிலையை சீராக வைத்து கொள்ளும் எந்த கொள்கையும் மத்திய அரசு பின்பற்றவில்லை. அதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. உணவு தானியங்களின் கொள்முதல் வியாபாரிகளை கட்டுப்படுத்தும் விஷயத்திலும் அரசு தோல்வி கண்டுள்ளது.

இந்நிலையில் நல்ல லாபத்தில் இயங்கிவரும் மத்திய அரசின் பொதுதுறை நிறுவனங்களை தனியார் மயமாக்கி வருகிறார் பிரதமர் நரேந்திரமோடி. அவரின் தவறான முடிவுகளால் பொதுத்துறை நிறுவனங்கள் பலவீனமாகி அழிந்து வருகிறது. பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்து கொடுப்பதின் மூலம் கார்ப்பரேட் கம்பெனிகளின் கைகூலியாக பிரதமர் மாறி வருகிறார்’’ என்றார்.



Tags : BJP ,Ramalingareddy , After the BJP-led rule in the middle No improvement in the economy: Ramalingamretti accuses
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...