×

தன்னை எம்ஜிஆர், ஜெயலலிதா என்று எடப்பாடி நினைக்கிறார் எல்லா தொகுதியிலும் அதிமுகவை வீழ்த்துவோம்: விஜயபிரபாகரன் ஆவேசம்

சிதம்பரம்: தன்னை எம்ஜிஆர், ஜெயலலிதா என்று எடப்பாடி நினைக்கிறார். எல்லா தொகுதியிலும் அதிமுகவை தேமுதிக வீழ்த்தும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் ஆவேசமாக பேசியுள்ளார்.  
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், தேமுதிக நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் தலைவர் விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் பேசியதாவது:-கடந்த 10 வருஷமா தேமுதிக தயவில்தான் அதிமுக ஆட்சியில் இருந்துருக்கு.. அது எல்லாருக்குமே தெரியும். 2016 கூட்டணியில் தேமுதிக விலகியதால் திமுக ஓட்டு குறைஞ்சு அதிமுக ஆட்சியை பிடிச்சாங்க.. அன்றைக்கே.. மறைந்த தலைவர் ஐயா கலைஞர் அவர்கள் சொன்னதுபோல், ‘‘பழம் நழுவி பாலில் விழுந்திருந்தால்’’ அதிமுக காணாம போய் இருக்கும். அதை எல்லாரும் இன்றைக்கு சிந்திக்கணும். அதாவது ஆட்சியை பிடிக்க 1 சதவீதம்தான் வாக்கு வித்தியாசம் இருந்தது. அந்த வாக்குவங்கி தேமுதிகவிடம் இருந்தது. 2016 மக்கள் நல கூட்டணியில் கட்சிக்காரர்கள் இன்னும் உழைத்து இருந்தால் 15 தொகுதிகளில் வெற்றி பெற்று இருப்போம். அந்த எம்.எல்.ஏ.க்களை வைத்து யார் முதல்வர் என்று நாம தேர்ந்தெடுத்து இருக்கலாம்.

அதுமட்டுமில்லாமல் அந்தக் கூட்டணியில் இருந்தபோது நமது வாக்கு சதவீதம் குறைவாக இருந்ததால்தான் தற்போது அதை கணக்கு வைத்துக்கொண்டு கூட்டணி பேரம் பேசுகிறார்கள். ஆனால், இந்த தேர்தலில் நாம (தேமுதிக) வெளியே வந்துவிட்டோம். கட்சி சின்னத்தில் போட்டியிட தயாராக இருக்கிறோம். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. அதனால், அதிமுகவை நாம் வீழ்த்தணும். எதிரிகளை வீழ்த்துவோம் என கூறி நாம் விழுந்து விடாமல் களப்பணி ஆற்ற வேண்டும். எனவே வருகிற 6ம் தேதி நமது கட்சி உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். 2006ல் மக்களுடனும், தெய்வத்துடனும்தான் கூட்டணி என கேப்டன் அறிவித்தார். அதுபோல தற்போது நிகழ ஒரு வாய்ப்பு அமைந்துள்ளது.
 பாமக, பாஜகவைவிட ஏன் எங்களை குறைத்து எடை போடுகிறீர்கள். ஆனால், அவங்களுக்கு கொடுக்கிற மரியாதையை எங்களுக்கு ஏன் தரலன்னுதான் கேள்வி. நாங்கள் எதிர்க்கட்சி அந்தஸ்தில் அமர்ந்திருக்கிறோம். 10 சதவீதம் வாக்கும் பெற்று இருக்கிறோம். நாங்க அதிமுக மந்திரிகள், எம்.பி.கள், அமைச்சர் ஜெயக்குமாரை மற்றும் பலரை நானோ எங்க மாமாவோ (சுதீஷ்) விமர்சித்து இருக்கிறோமா?

அதிமுக தலைமைதான் சரியில்லை. அதுதான் பிரச்னை. இதை அதிமுக சிந்திக்கவேண்டும். எனினும் மீண்டும் அதிமுகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி வைக்க மாட்டோம். நாங்கள் அதிமுக தொண்டர்களையோ, அமைச்சர்களையோ விமர்சனம் செய்யவில்லை எடப்பாடி பழனிசாமியைதான் விமர்சனம் செய்கிறோம். அவருக்கு எம்ஜிஆர், ஜெயலலிதாவைப் போல நினைப்பு. அவரது காலில் விழ வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.   என்னமோ எடப்பாடி எடப்பாடி என்கிறார்கள். இந்த முறை எடப்பாடி தொகுதியில நீங்க (முதல்வர் பழனிசாமி) மண்ணை கவ்வதான் போறீங்க... நீங்க யாரு எங்களுக்கு சீட் இல்லன்னு சொல்றது. இந்த முறை ஒவ்வொரு தொகுதியிலும் உங்களது வெற்றி பறிக்கப்படும். இதற்காக வேலையை தேமுதிகவினர் செய்வார்கள். எங்களை எங்கிருந்தாலும் வாழ்க என ஜெயக்குமார் வாழ்த்தினார். நிச்சயமாக நாங்கள் வளர்வோம்.  விஜயகாந்த் உடல்நிலை சரியில்லை என்றாலும் அவர் மீண்டும் மக்கள் முன் வந்து நிற்பார் என்றார்.



Tags : Edipada ,MGR ,Jayalalitha ,vijayaprakaran , Edappadi thinks he is MGR, Jayalalithaa: We will bring down AIADMK in all constituencies: Vijaya Prabhakaran
× RELATED எம்ஜிஆர் நகர் பகுதியில் போதை மாத்திரைகள் விற்ற பெண் உட்பட 5 பேர் கைது