×

கொல்கத்தா தீ விபத்தில் 9 பேர் பலி 2 சடலங்களை டிஎன்ஏ மூலம் அடையாளம் காண முயற்சி

கொல்கத்தா: கொல்கத்தா ரயில்வே கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பலியாகினர். இதில் முற்றிலும் எரிந்த 2 சடலங்களை டிஎன்ஏ மூலம் அடையாளம் காண அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் ஸ்டிரான்ட் சாலையில் ரயில்வேக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது. பல மாடிகள் கொண்ட இக்கட்டிடத்தில் ரயில்வே ஊழியர் குடியிருப்பும், கீழ் தளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு மையமும் அமைந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை கட்டிடத்தின் 13வது மாடியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 12 மாடிக்கும் தீ பரவிய நிலையில், 10 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். லிப்ட் மூலமாக விரைவாக 13வது மாடிக்கு செல்ல முயன்ற சில தீயணைப்பு வீரர்கள் 12வது மாடியில் லிப்ட் சிக்கிக் கொள்ள வெளியேற முடியாமல் தவித்தனர். லிப்ட்டில் தீ பரவிய நிலையில் 4 தீயணைப்பு வீரர்கள் கருகி பலியாகினர்.

இந்த விபத்தில் 4 தீயணைப்பு வீரர்கள், ஒரு உதவி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர், ரயில்வே போலீசை சேர்ந்த ஒருவர் உட்பட 9 பேர் பலியாயினர். இதில் 7 பேர் சடலங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், 2 சடலங்கள் முற்றிலும் கருகியதால் அடையாளம் காண முடியவில்லை. எனவே, டிஎன்ஏ மூலம் சடலங்களை அடையாளம் காணும் முயற்சி நடந்து வருகிறது. தீ விபத்தில் பலியானவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். தீயணைப்பு துறை, ரயில்வே நிர்வாகம் சார்பில் விபத்துக்கான காரணம் குறித்து உயர்மட்ட விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இதிலும் கூட அரசியல்தான்
கொல்கத்தா தீ விபத்து சம்பவத்தை பாஜ கட்சி அரசியலாக்கி வருகிறது. அக்கட்சியின் மேற்கு வங்க மாநில பொறுப்பாளரான அமித் மால்வியா நேற்று தனது டிவிட்டரில், ‘பேரிடர் மேலாண்மை விதிமுறைப்படி, போதிய தீத்தடுப்பு கருவிகளை கட்டிடத்தில் அமைத்திருக்க வேண்டும். இந்த விஷயத்தில் மேற்கு வங்க அரசு அலட்சியமாக இருந்திருக்கிறது. இந்த விஷயத்தில் ‘அக்கா’ தோல்வி அடைந்து விட்டார்’ என மேற்கு வங்க முதல்வர் மம்தாவை மறைமுக விமர்சித்தார். இதற்கு மாநில தீயணைப்பு துறை அமைச்சர் சுஜித் போஸ் அளித்த பதிலடியில், ‘‘இது ரயில்வே கட்டிடம். இக்கட்டிடத்தின் 12வது வரைபடத்தை நாங்கள் கேட்டும், ரயில்வே நிர்வாகம் தரவில்லை. தேர்தல் ஆதாயத்திற்காக இந்த விபத்திலும் கூட மலிவான அரசியல் செய்கின்றனர்,’’ என்றார். முன்னதாக நேற்று முன்தினம் இரவு விபத்து இடத்திற்கு முதல்வர் மம்தா சென்றபோதும், ஒரு ரயில்வே அதிகாரி கூட வராததை கடுமையாக கண்டித்தார்.

Tags : Kolkata , Kolkata fire kills 9, attempts to identify 2 bodies by DNA
× RELATED வெடிகுண்டு மிரட்டலை அடுத்து சென்னை...