காந்தி மண்டபம் சுவர் மீது திடீரென `காவி வர்ணம்’ பூச்சு-மாநகராட்சி நடவடிக்கையால் மக்கள் அதிர்ச்சி

நெல்லை : பாளையில்  உள்ள காந்தி மண்டபத்தில் காங்கிரஸ் கட்சி வண்ணம் மீது காவி சாயம் பூசி  மறைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்  ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.பாளையங்கோட்டை  கோட்டூர் சாலையில்  வாய்க்காலம் பாலம் அருகில் காந்தி மண்டபம் உள்ளது. அங்கு காந்தி, இந்திரா,  பாரதியார், கிருஷ்ணர் சிலைகள் உள்ளன. இந்த மண்டபத்தை சுற்றி அமைந்துள்ள  சுற்றுச்சுவர் மீது காங்கிரஸ் கட்சியின்  கொடி  வர்ணம் தீட்டப்பட்டு இருந்தது. தற்போது சட்டமன்ற தேர்தல் காரணமாக தேர்தல் நடத்தை விதிமுறை  அமல்படுத்தப்படுகிறது.

இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள், காந்தி  மண்டபத்தின் பாதுகாப்பு சுவரில் உள்ள காங்கிரஸ் கட்சியின் வர்ணத்தை  மறைக்கும் வகையில் சுற்றுச்சுவர் மீது காவி சாயம் பூசியுள்ளனர். இதற்கு  அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தும், காவி வர்ணத்தை அகற்ற  வலியுறுத்தியும் காந்தி மண்டபம் முன் நேற்று காலை திரண்டு முற்றுகை  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவல்  அறிந்து பாளை உதவி கமிஷனர் ஜான்பிரிட்டோ, இன்ஸ்பெக்டர் ஆடிவேல்,  எஸ்.ஐ.மகேஷ் ஆகியோர்  பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  இதைத்தொடர்ந்து காவி சாயத்தை மறைக்கும் வகையில் மாநகராட்சி ஊழியர்கள்  மூலம் சுண்ணாம்பு அடித்து மறைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து  பொதுமக்கள், போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். முற்றுகை  போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: