திருச்சியில் திமுக பிரமாண்ட தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம் லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர்: 100 அடி உயர கம்பத்தில் மு.க.ஸ்டாலின் கொடி ஏற்றினார்

திருச்சி: ‘‘தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம்’’ என்ற பெயரில் திருச்சியில் திமுகவின் பிரமாண்ட தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால் திருச்சியே குலுங்கியது. 100 அடி உயர கொடி கம்பத்தில் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கொடி ஏற்றினார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக சார்பில் 11வது மாநில மாநாடு மார்ச் 14ம் தேதி திருச்சியில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக திருச்சி- சென்னை பைபாஸ் சாலையில் சிறுகனூரில் இடம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடந்தன. இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், அதே இடத்தில் பிரமாண்ட தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம் என்ற தலைப்பில் மாநாடு போல் இந்த கூட்டம் நடத்த 750 ஏக்கரில் பொதுக்கூட்ட வளாகம் தயாராகி இருந்தது. இதில் வாகனங்கள் நிறுத்த மட்டும் 400 ஏக்கர் ஒதுக்கப்பட்டது. 350 ஏக்கரில் கூட்டம் நடைபெற்றது. அருகருகே தனித்தனியாக 3 மேடைகள் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு இருந்தன. கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் நேற்று காலை 11.30 மணியளவில் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் கே.என்.நேரு தலைமையில் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். சிறிது நேர ஓய்வுக்கு பின் மதியம் 1 மணியளவில் மு.க.ஸ்டாலின் கூட்டம் நடை பெற்ற இடத்துக்கு வந்தார். அங்கு நுழைவாயிலில் 100 அடி உயர கொடிக்கம்பத்தில் திமுக கொடியை ஏற்றி வைத்தார்.

இதில் அண்ணா, கலைஞர் குறித்த வீடியோ காட்சிகள் எல்இடி திரைகளில் ஒளிபரப்பப்பட்டன. திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு வரவேற்று பேசினார். இதைத்தொடர்ந்து பொருளாதாரம் என்ற தலைப்பில் ஜெயரஞ்சன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், வேளாண்மை என்ற தலைப்பில் பாலசுப்பிரமணிய தீட்சிதர், ஏ.கே.எஸ்.விஜயன், எ.வ.வேலு, நீர்வளம் என்ற தலைப்பில் பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன், கார்த்திகேய சிவசேனாபதி, தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி, கல்வி என்ற தலைப்பில் பிரின்ஸ் கஜேந்திரபாபு, உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு ஆகியோர் பேசினர். இந்த நிகழ்வுக்கு செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் நெறியாளராக இருந்தார்.

இதனைத்தொடர்ந்து மாலை 4 மணி முதல் 4.15 மணி வரை தமிழ்பண்பாடு மற்றும் பெருமையை பறை சாற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. சுகாதாரம் என்ற தலைப்பில் மருத்துவர் ரவீந்திரநாத், மருத்துவர் கனிமொழி, என்.வி.என்.சோமு, கலாநிதி வீராசாமி எம்பி, நகர்ப்புற வளர்ச்சி என்ற தலைப்பில் எழிலன் நாகநாதன், மா.சுப்பிரமணியன், தயாநிதி மாறன் எம்பி, ஊரக உட்கட்டமைப்பு என்ற தலைப்பில் சுப.வீரபாண்டியன், இ.பரந்தாமன், கு.பிச்சாண்டி, சமூகநீதி என்ற தலைப்பில் வே.மதிமாறன், கனிமொழி எம்பி, ஆ.ராசா எம்பி ஆகியோர் பேசினர். இந்த நிகழ்வுக்கு செய்தி தொடர்பு இணை செயலாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் நெறியாளராக இருந்தார். மாலை 5.15 மணி முதல் 5.30 மணி வரை தமிழ்பண்பாடு மற்றும் பெருமையை பறை சாற்றும் கலை நிகழ்ச்சி நடந்தது.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதுமிருந்து முதல் நாள் இரவில் இருந்தே நிர்வாகிகள், தொண்டர்கள் சாரை சாரையாக வந்து குவிந்தனர். நேற்று காலையிலும் கார், வேன்களில் குவிந்தனர். திருச்சி மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகளாக காட்சியளித்தனர். திருச்சியே குலுங்கும் அளவுக்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்து இருந்தனர். கூட்டம் நடைபெற்ற பகுதி மட்டுமின்றி திருச்சி மாநகர் முழுவதும் முக்கிய இடங்களில் திமுக கொடிகள் கட்டப்பட்டு இருந்தன. இதனால் திருச்சியே விழாக்கோலமாக பூண்டது.

மேடைக்கு வந்த மு.க.ஸ்டாலினுக்குதொண்டர்கள் எழுந்து நின்றுகைத்தட்டி மரியாதை

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சரியாக 6.45 மணியளவில் விழா மேடைக்கு வந்தார். மேடைக்கு வந்த அவர் மேடையில் வைக்கப்பட்டிருந்த பெரியார் , அண்ணா, கலைஞர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  தொடர்ந்து அவருக்கு தொண்டர்கள் அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி வரவேற்றனர். தொண்டர்கள் கைத்தட்டல் விண்ணை முட்டும் அளவுக்கு அதிர்ந்தது.  தொடர்ந்து அவர் மேடையின் 3 புறமும் அமைக்கப்பட்டிருந்த பிரத்யேக நடைமேடையில் நடந்து சென்று தொண்டர்களை நோக்கி கையசைத்து உற்சாகப்படுத்தினார். அப்போது ஸ்டாலின் வாழ்க வாழ்க வாழ்க என்று கோஷம் எழுப்பினர்.

தலைவர்களின் புகைப்பட கண்காட்சி அரங்கு

மாநாட்டு அரங்கில் பெரியார்,  அண்ணா, கலைஞர்,  மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களின் படங்கள் அடங்கிய 90 புகைப்படம் கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. இதில் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, பங்கேற்ற போராட்டம், ஆர்ப்பாட்டங்களின் படங்கள். ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகள்,  பிரசார பயணங்களின் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது. அதுமட்டுமட்டுமல்லாமல் அண்மையில் மு.க.ஸ்டாலின் மேற்கண்ட பிரசாரங்களின் புகைப்படங்கள் அதில் இடம் பெற்று இருந்தது. இந்த புகைப்படங்களை மாநாட்டிற்கு வந்தவர்கள் பிரமிப்புடன் பார்த்தனர். மேலும் அதன் முன்பாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர். அது மட்டுமல்லாமல் மு.க.ஸ்டாலினுடன் நின்று படம் எடுப்பதற்காக சிறிய, சிறிய 180 புகைப்படம் கட்அவுட் அமைக்கப்பட்டிருந்தது. அதன் முன்பாக நின்று செல்பி எடுத்து கொண்டனர்.

3 பிரமாண்ட மேடைகள்

திமுக சிறப்பு பொதுக்கூட்டத்தில் 3 பிரமாண்ட மேடைகள் அமைக்கப்பட்டிருந்தது. நடுவில் உள்ள மேடையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அமர்ந்திருந்தார். அவர் இருந்த மேடையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்,  பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே. என்.நேரு, துணை பொது செயலாளர்கள் ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர். இடதுபுறத்தில் உள்ள மேடையில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் , மத்தியசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், எம்பிக்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி உள்ளிட்ட அனைத்து எம்பிக்கள் மற்றும் அனைத்து திமுக எம்எல்ஏக்கள் அமர்ந்திருந்தனர். மேடையின் வலதுபுறம் சென்னை மாவட்ட செயலாளர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மாதவரம் சுதர்சனம், மயிலை த.வேலு, சிற்றரசு, இளைய அருணா உள்ளிட்ட அனைத்து மாவட்ட செயலாளர்கள் அமர்ந்திருந்திருந்தனர். மேடையின் இடது புறமும்,  வலதுபுறமும்  தலா 500 அடி நீளத்திற்கு பிரமாண்ட எல்இடி திரைகள் அமைக்கப்பட்டிருந்தது. மேடைகளில் விடியலுக்கான முழக்கம்,  ஸ்டாலின் தான் வாராது,  விடியல் தரப்போறாரு என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது.

வெளிநாடுகளில் நடப்பது போல்

கூட்ட அரங்கில் தொண்டர்கள் மாவட்டம் வாரியாக அமர வைக்கப்பட்டனர். ஸ்டாலின் நடைமேடையில் நடந்து சென்று தொண்டர்களை பார்த்து கையசைத்தபடி மைக்கில் பேசினார். வெளிநாடுகளில் தான் தேர்தல் பிரசாரத்தில் தலைவர்கள், இதுபோல் நடைமேடைகளில் நடந்து சென்று தொண்டர்களை சந்தித்து பிரசாரம் செய்வார்கள். தமிழகத்தில் இவ்வாறு பிரசாரம் செய்வது இதுவே முதன்முறை என்று கூறப்படுகிறது.

வெயிலை பொருட்படுத்தாமல் சாரை சாரையாக கூட்டம்

திருச்சியில் நேற்று காலை முதல் வெயில் சுட்டெரித்தது. ஆனால் வெயிலையும் பொருட்படுத்தாமல் காலை முதலே தொண்டர்கள் மாநாடு நடைபெறும் இடத்திற்கு வரத்தொடங்கினர். மதியம் 12 மணிக்கு மேல் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. இதனால் மாநாடு நடைபெற்ற முகப்பின் முன்பாக தொண்டர்களாக காட்சியளித்தனர். அவர்களுக்கு வெயிலின் கொடுமையில் இருந்து விடுபடும் வகையில் திமுகவினர் சார்பில் தொப்பிகள், தண்ணீர் பாட்டில்கள், குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.  மாலையில் எங்கும் பார்த்தாலும் மக்கள் தலைகளாக காட்சி அளித்தது.

வாணவேடிக்கையை கண்டு ரசித்தமு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி மொழியை படித்த பின்னர் லட்சக்கணக்கான தொண்டர்கள் அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டினர். தொடர்ந்து வெற்றியை கொண்டாடும் வகையில் பிரம்மாண்ட அளவில் கலர், கலராக வாணவேடிக்கை சுமார் 15 நிமிடங்களாக இருளை வெளிச்சமாக்கியது. இதை மு.க.ஸ்டாலின் கண்டு ரசித்தார்.

50 கிலோ மீட்டர் தொலைவுக்குதிமுக கொடி, மின் விளக்கு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை வரவேற்று திருச்சி விமானம் நிலையம் முதல் மாநாட்டு விழா மேடை வரை (சிறுகனூர் )சாலையின் இருபுறமும் 6 அடிக்கு ஒரு திமுக கொடி பறக்கவிடப்பட்டிருந்தது. மேலும் மின்விளக்கு (டியூப்லைட்) அமைக்கப்பட்டிருந்தது. அதே போல மாநாடு மேடையில் இருந்து பெரம்பலூர் எல்லையான பாடானூர் வரை சாலையின் இருபுறமும் தொண்டர்களை வரவேற்றும் திமுக கொடி மற்றும் மின்விளக்கு அமைக்கப்பட்டிருந்தது. மொத்தம் இருமுனையிலும் சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் வரை பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டிருந்தது. இதனால் சாலைகள் இரவு நேரத்திலும் பகல் போல காட்சி அளித்தது.வரவேற்பை பார்த்து தொண்டர்களே அதிர்ந்து போயினர். அது மட்டுமல்லாமல் பெரியார்,  அண்ணா, கலைஞர், மு.க.ஸ்டாலினின் பிரமாண்ட கட்அவுட் அமைக்கப்பட்டிருந்தது.

மாநாட்டில் பங்கேற்க கார்மாறி வந்த மு.க.ஸ்டாலின்

திருச்சியில் திமுக சார்பில் நடந்த சிறப்பு பொதுக்கூட்டத்தில் பகல் 1 மணியளவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொடியேற்றி துவக்கி வைத்தார். சுமார் 100 அடி உயரம் கொண்ட கட்சி கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அவர் திருச்சி சமயபுரத்தில் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் உள்ள தங்கும் விடுதியில் ஓய்வெடுப்பதற்காக சென்றார். தொடர்ந்து அவர், மாலை 6.15 மணியளவில் அவர் தங்கும் விடுதியில் இருந்து சிறப்பு பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு பிரச்சார வாகனத்தில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். அப்ேிபாது சாலையின் இருபுறமும் பயங்கரமான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மு.க.ஸ்டாலின் கார் சிக்கி கொண்டது. இந்த நிலையில் மாநாட்டில் பங்கேற்பதற்காக அங்கிருந்து வேறு வாகனம் மூலம் மாநாடு நடைபெறும் இடத்துக்கு வந்தார்.

அப்போது, பேசிய திமுக முதன்மை செயலாளர் கேஎன்.நேரு பேசுகையில், திமுகவின் சிறப்பு பொதுக்கூட்டத்துக்கு லட்சக்கணக்கான தொண்ரடர்கள் கலந்து கொண்டனர். ஆனால், போக்குவரத்தையும், வந்த தொண்டர்களையும் ஒழுங்குபடுத்தும் வகையில் போலீசார் எந்த பணியும் செய்யவில்லை. சொல்லபோனால் அங்கு போலீசாரே இல்லை. இதனால், நாங்கள் கூட்ட நெரிசலில் சிக்கி கொண்டோம். இதனால், வேறு ஒரு கார் மூலமாக விழா நடைபெறும் மேடைக்கு வர வேண்டியிருந்தது. 1996ம் ஆண்டு இதே திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் திமுக தலைவர் கலைஞர் கலந்து கொண்டார். அவர் நெரிசலில் சிக்கியதால், மோட்டார் சைக்களில் வந்த வரலாறு எல்லாம் திமுகவுக்கு உண்டு என்று அவர் கூறினார்.

Related Stories:

More