பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் இம்ரான்கான் அரசு வெற்றி: 11 எதிர்க்கட்சிகளின் முயற்சி தோல்வி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் கீழ் அவையில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் இம்ரான் கானின் அரசு வெற்றி பெற்றது. பாகிஸ்தானில் கடந்த புதன்கிழமை நடந்த மேலவை தேர்தலில், ஆளும் கட்சியான தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் வேட்பாளரும், நிதியமைச்சருமான அப்துல் ஹபீஸ் ஷெய்க்கை பாகிஸ்தான் ஜனநாயக இயக்க வேட்பாளரும், முன்னாள் பிரதமருமான யூசுப் ரஸா கிலானி தோற்கடித்தார். இந்த தோல்வியைத் தொடர்ந்து, பிரதமர் இம்ரான்கான் பதவி விலக வேண்டும் என்று 11 எதிர்கட்சிகளின் பாகிஸ்தான் ஜனநாயக இயக்க கூட்டணி நெருக்கடி கொடுத்தது. இதனால், பாகிஸ்தான் அரசியலமைப்பு சட்டம் 91 (7)ன்படி, இம்ரான் கான் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று வெளியுறவு அமைச்சர் மக்மூத் குரேஷி ஒற்றை தீர்மானத்தை தாக்கல் செய்தார். அதன்படி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த நேற்று நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் கூடியது. அப்போது, இதனை புறக்கணித்து எதிர்க்கட்சி கூட்டணிகள் வெளிநடப்பு செய்தன. இதனால், மொத்தம் 342 உறுப்பினர்கள் உள்ள கீழ் அவையில், பெரும்பான்மைக்கு 172 வாக்குகள் தேவை என்ற நிலையில், 178 வாக்குகள் பெற்று இம்ரான் கான் அரசு பெரும்பான்மையை நிரூபித்தது.

Related Stories:

>