×

நகராட்சி நிர்வாகம் அலட்சியம்!: தாராபுரம் பகுதியில் குடிநீரில் சாக்கடை கழிவுநீர் கலந்து வரும் அவலம்.. ஒவ்வாமையால் பொதுமக்கள் அவதி..!!

திருப்பூர்: தாராபுரம் நகராட்சி குடிநீரில் சாக்கடை கழிவுநீர் கலந்து வருவதால் ஒவ்வாமை நோயினால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சியில் உள்ள 26வது வார்டில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் மேல் கான்கிரீட் பாலம் அமைப்பதற்காக நகரின் பல இடங்களிலும் சாலைகளில் குழி தோண்டப்பட்டுள்ளது. இப்பணியின் போது சாக்கடை கால்வாய் அருகிலேயே செல்லும் குடிநீர் கால்வாய்களிலும் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுமக்களுக்கு நகராட்சி சார்பாக தகவல் தெரிவிக்கப்படாததால் கடந்த 3 நாட்களாக மக்களுக்கு கழிவுநீர் கலந்த குடிநீரே விநியோகிக்கப்பட்டு அதையே அவர்கள் குடித்தும், குளித்தும் வந்துள்ளனர். இதனால் பலருக்கும் உடலில் ஒவ்வாமை ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை நகராட்சி குழாயில் கருப்பு நிறத்தில் குடிநீர் வந்துள்ளதால் மக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இதுகுறித்து தாராபுரம் நகராட்சி அலுவலகத்திற்கு தகவல் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டும் பொதுமக்கள், நகராட்சி அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு குடிநீர் குழாய் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தனர். குழாய் உடைப்பு என தகவல் தெரிவிக்காமல் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியமே ஒவ்வாமைக்கு காரணம் என்றும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


Tags : Darapura , Tarapuram, drinking water, sewerage, allergies
× RELATED தாராபுரம் நகராட்சியில் ஒப்பந்த...