ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை, முதுகுளத்தூர் என 4 தொகுதிகள் இருக்கின்றன. இந்த தொகுதிகளில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி எம்எல்ஏக்களின் மந்தமான செயல்பாடுகளால் ஆளுங்கட்சிக்கு செல்வாக்கு கடுமையாக சரிந்துள்ளது. இதனைப்பயன்படுத்தி திருவாடானை உள்ளிட்ட தொகுதிகளில் தாங்கள்தான் போட்டியிடப் போவதாக தேர்தல் அறிவிப்பு துவங்கியதிலிருந்து, பாஜவினர் பெரும் பிரசாரமாகவே செய்து வருகின்றனர். இதனால், உள்ளூர் அதிமுக நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருந்தனர். இப்படியே விட்டால், மாவட்டத்தில் மீண்டும் தலையெடுக்க முடியாமல் போய்விடும் என தலைமைக்கு மனு மேல் மனு தட்டிக் கொண்டிருந்தனர்.
இதையடுத்து, மாவட்டத்தின் 4 தொகுதிகளிலுமே அதிமுகவே போட்டியிட முடிவு எடுக்கப்பட்டிருக்கிறதாம். இது பாஜவினரை பெரும் அதிருப்திக்கு ஆளாக்கி உள்ளது. தீவிர பிரசாரம் செய்து, மாவட்டத்தில் உள்ள தாமரை தொண்டர்கள் மனதில் ஆசையை ஏற்படுத்தியுள்ள நிலையில், திடீரென அதிமுக தரப்பு இப்படி செய்வதா என குமுறிக் கொண்டிருக்கிறார்களாம். உச்சகட்டமாக, மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் அதிமுகவே போட்டியிட்டால் ‘உள்ளடி’ வேலை பார்க்கவும் பாஜ கட்சியினர் தயாராகி வருகிறார்களாம்.