×

நகராட்சி எச்சரிக்கையை மீறி வராகநதி பாலத்தில் வாகனங்கள் பார்க்கிங் : அதிகாரிகள் அபராதம் விதிப்பார்களா?

பெரியகுளம்: பெரியகுளம் வராகநதியில் வடகரை-தென்கரை ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில்  கட்டப்பட்டுள்ள பாலத்தில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.  தேனி  மாவட்டம் பெரியகுளத்தில் நகரின் நடுவே வராகநதி ஓடுகின்றது. இந்த வராகநதியில் வடகரை, தென்கரை என்ற இரு  பகுதிகளையும் இணைக்கும் வகையில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஆடுபாலம் கட்டப்பட்டு பொதுமக்கள் நடந்து செல்லும்  வகையில் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரியகுளம் நகர் பகுதியில் உள்ள மக்கள்  வடகரையில் இருந்து தென்கரை பகுதிக்கு செல்வதற்கு அதிக தூரம் சுற்றி வர வேண்டிய சூழ்நிலை உள்ளதாக கூறி ஆடுபாலத்தை  மாற்றி தரைப்பாலம் ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

பொதுமக்கள் மற்றும் பெரியகுளம் பகுதி சமூக  ஆர்வலர்களின் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் பழமை வாய்ந்த ஆடுபாலத்தை இடித்து அப்புறப்படுத்தி தரைப்பாலமாக  மாற்றியமைத்தனர். இந்த பாலம் வடகரை, தென்கரை பகுதியில் உள்ளவர்கள் இரு பகுதிகளுக்கும் சுலபமாக சென்று காய்கறி மார்க்கெட்,  மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு செல்வதற்காகத்தான் கட்டப்பட்டது. ஆனால் தற்போது  பாலத்தில் வரிசையாக வாகனங்கள் பார்க்கிங் செய்யப்படுகின்றன. காய்கறி பழவகைகள், மீன்கடைகள் போட்டு  வியாபாரமும் செய்து வருகின்றனர்.

பாலம் பல டன் எடையுள்ள வாகனங்களை தாங்கி நிற்பதோடு போக்குவரத்து இடையூறும்  ஏற்பட்டு வருகிறது. இந்த பாலத்தில் வாகனங்கள் நிறுத்தக்கூடாது என்று நகராட்சி நிர்வாகத்தினர் அறிவிப்பு பலகை  வைத்திருந்த போதிலும் வாகனங்களை தொடர்ந்து நிறுத்தி வருகின்றனர். எனவே இதனை கண்டு கொள்ளாத வாகன ஓட்டிகள் மீது நகராட்சி நிர்வாகத்தினரும், காவல்துறையினரும் உடனடி  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : Varaganadi bridge , Parking of vehicles on Varaganadi bridge in defiance of municipal warning : Will the authorities impose fines?
× RELATED பெரியகுளம் வடகரை ஊராட்சி வராகநதி...