×

பாஜவுடன் ரகசிய பேச்சு எதிரொலி: சசிகலா-டிடிவி தினகரன் இடையே கருத்து வேறுபாடு: குழப்பத்தில் அமமுக தொண்டர்கள்

சென்னை: பாஜவுடன் ரகசிய பேச்சு நடத்தியதால் சசிகலா- டிடிவி தினகரன் இடையே கருத்து மோதல் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையாகி சசிகலா வந்தால் தன்னுடைய பெசன்ட்நகர் வீட்டுக்கு வரும்படி டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்தார். ஆனால் சசிகலாவோ, தினகரன் மீதான அதிருப்தியில் இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியாவின் வீட்டுக்கு சென்று விட்டார். ஏற்கனவே டிடிவி தினகரனுக்கும், இளவரசியின் மகன் விவேக் ஜெயராமனுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்ததாக கூறப்படுகிறது. தான் இந்த அளவுக்கு அதிமுக தொண்டர்களாலும், தலைவர்களாலும் ஓரங்கட்டப்பட என்ன காரணம் என்று தனக்கு நெருக்கமானவர்களிடமும், தினகரனால் ஓரங்கட்டப்பட்ட சில தலைவர்களிடமும் சசிகலா பேசியுள்ளார்.

அதில் சசிகலாவின் தம்பி திவாகரன், இளவரசி, அவரது மகள் கிருஷ்ணப்பிரியா மற்றும் உறவினர்களிடமும் ஆலோசனை நடத்தியுள்ளார்.
அப்போது பேசிய அனைவரும், டிடிவி தினகரனின் நடவடிக்கையால்தான் அனைவரும் பாதிக்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர். யாரையும் மதிப்பதில்லை. எடுத்தெறிந்து பேசுவது. ஒரு சில சுயநலவாதிகளின் பேச்சைக் கேட்டு திறமையானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது, எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற பாணியில் நடந்து ெகாள்வது என்று செயல்பட்டுள்ளார். அவர், ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு தனக்கு ஜெயலலிதாவை விட அதிக செல்வாக்கு இருப்பதாக கருதிக் கொண்டார். அதனால் நாங்கள் செல்வதை கேட்கவில்லை. பெங்களூரு புகழேந்தி கூட அவரை விட்டுச் சென்று விட்டார்.

அந்த அளவுக்கு கூட இருந்தவர்களை அவர் காயப்படுத்தியுள்ளார் என்று தினகரன் மீது சரமாரியாக குற்றச்சாட்டுக்களை தெரிவித்தனர். இதனால் கடந்த சில நாட்களாக தினகரனுடன் ஆலோசனை நடத்துவதை சசிகலா தவிர்த்து வந்தார்.ஜெயலலிதா பிறந்த நாள் கடந்த மாதம் 24ம் தேதி கொண்டாடப்பட்டது. அப்போதுதான் தினகரனை அவர் சந்தித்துப் பேசினார். அதன்பின்னர் அவர் தினகரனை சந்திக்கவில்லை. தினகரனும் கிருஷ்ணப்பிரியா வீட்டுக்கு வர விரும்பவில்லை. ஆனால் சசிகலாவிடம், பாஜவுடன் பேசுவதாக கூறிச் சென்றுள்ளார். ஆனால் முழுமையாக எதையுமே தெரிவிக்கவில்லை. மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டியுடன் ரகசிய பேச்சு நடத்தியதும் தெரிவிக்கவில்லை. இப்போது எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சேர்ந்து, அமமுகவுக்கு சீட் கொடுக்க எதிர்ப்பு தெரிவித்ததோடு, அவர்கள் அனைவரும் பாஜ சின்னத்தில் போட்டியிட்டால் கூடுதல் சீட்டுகளை தருவதாக உறுதியளித்தனர்.

இதனால் அமித்ஷாவும், கிஷன்ரெட்டியும் பாஜ சின்னத்தில் அமமுக வேட்பாளர்கள் போட்டியிட வேண்டும் கூறத் தொடங்கிவிட்டனர்.
இது அமமுகவுக்கு இடியாப்ப சிக்கலை ஏற்படுத்தி விட்டது. கூட்டணி என்று சென்று மாட்டிக்கொண்டோமே என்று தினகரனும் சொல்ல ஆரம்பித்து விட்டார். இதைத்தான் நேற்று சசிகலாவை சந்தித்தபோது தெரிவித்துள்ளார். ஆனால், தினகரனின் நடவடிக்கையை சசிகலா ரசிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் முக்கிய விஐபிக்களை சந்திக்கும்போது, இளவரசி, கிருஷ்ண பிரியா, இளவரசியின் சகோதரர்கள் வடுகநாதன், கண்ணதாசன் ஆகியோர் உள்ளனர். சசிகலா யாரை சந்திக்க வேண்டும் என்பதற்கான அனுமதி கொடுப்பது திருவையாறு கார்த்திக் என்பவராம். இவர்தான் இப்பொழுது சசிகலாவுக்கு உதவியாளராம்.

சசிகலாவும் தற்போது தினகரனின் மாய வலைக்குள் மாட்டிக் கொண்டதால் அதில் இருந்து வெளியில் வர முடியாமல் தவித்து வருகிறாராம். இதனால் அவருக்கும், தினகரனுக்கும் பனிப்போர் ஆரம்பித்து விட்டதாம். இதனால்தான் தினகரனை மீறி அமமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்களோ, நிர்வாகிகளோ கூட சசிகலாவை சந்திக்கவில்லையாம். இதனாலும் அவர் அதிருப்தியில் உள்ளாராம். இதனால் இந்த தேர்தல் நேரத்தில் சசிகலா அதிரடியாக சில முடிவுகளை எடுப்பார் என்று எதிர்பார்க்கின்றனர். பாஜவின் முடிவைப் பொறுத்து அவரது நடவடிக்கையும் இருக்கும் என்கின்றனர் சசிகலா ஆதரவாளர்கள்.

Tags : Baja ,Sasicala ,DTV ,Dinagaran , Echo of secret talks with BJP: Disagreement between Sasikala-DTV Dinakaran: Aam Aadmi Party volunteers in chaos
× RELATED கோடை வெப்பம்: குடிநீர், நீர்மோர்...