×

பதிவு எண், இன்சூரன்ஸ் இல்லாத குப்பை அள்ளும் பேட்டரி ஆட்டோக்கள் மீது நடவடிக்கை கோரி வழக்கு: தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னையில் குப்பைகளை அகற்ற, பதிவு எண், காப்பீடு இல்லாத பேட்டரி ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்காத போக்குவரத்து துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கும், சென்னை மாநகராட்சிக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, திருநெல்வேலி உள்ளிட்ட நகரங்களில், குப்பைகளை அப்புறப்படுத்த பேட்டரி ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில், 3 ஆயிரம் பேட்டரி ஆட்டோக்கள், தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் இயக்கப்படுகின்றன. போக்குவரத்து துறையில் பதிவு செய்யப்படாத இந்த ஆட்டோக்களுக்கு, காப்பீடும் இல்லை.

இந்நிலையில்,  இது தொடர்பாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், குப்பை அள்ளுவதற்காக பதிவு செய்யப்படாமல் இயக்கப்படும் பேட்டரி ஆட்டோக்களால் விபத்துக்குள்ளாகி பாதிக்கப்படும் பாதசாரிகள், எந்த இழப்பீடும் பெற முடியாத நிலை உள்ளது. மத்திய மோட்டார் வாகன சட்டப்படி, பேட்டரி மூலம் இயக்கப்படும் மூன்று சக்கர வாகனங்களை பதிவு செய்ய எந்த விலக்கும் அளிக்கப்படவில்லை. கடந்த 18 மாதங்களாக இந்த ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.

ஆனால், போக்குவரத்து போலீஸ்   அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கடமை தவறி வருகிறார்கள். எனவே, சட்டவிரோதமாக இயக்கப்படும் குப்பை அள்ளும் பேட்டரி ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.  கடமை தவறிய போக்குவரத்து துறை அதிகாரிகள் மீதும், போக்குவரத்து காவல் துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப்  பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கும், சென்னை மாநகராட்சிக்கும், சென்னை போலீஸ் கமிஷனருக்கும்  உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.

Tags : Government of Tamil Nadu ,Chennai Corporation , Registration Number, Case seeking action against uninsured garbage disposal battery autos: Government of Tamil Nadu, Chennai Corporation reply order iCourt order
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...