செல்வராகவன் இயக்கத்தில் வெளிவரவுள்ள நெஞ்சம் மறப்பதில்லை படத்தை வெளியிட தடை: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: செல்வராகவன் இயக்கியுள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வருகிற மார்ச் 5ம் தேதி வெளியாக உள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படத்திற்கு இடைக்கால தடைவிதிக்கக் கோரி ரேடியன்ஸ் மீடியா சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், என்னை நோக்கி பாயும் தோட்ட படத்திற்காக பட தயாரிப்பு நிறுவனமான எஸ்க்கேப் ஆர்டிஸ்ட்  எங்களிடம் ரூபாய் 2 கோடியே 42 லட்சம் கடன் வாங்கியது. படத்தை வெளியிடுவதற்கு முன்னால் 1 கோடியே 75 லட்சம் ரூபாய் கடனை அந்த நிறுவனம் தந்துவிட்டது.

மீதமுள்ள 1 கோடியே 24 லட்சம் ரூபாயை திரும்ப கொடுக்காமல் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட உள்ளது. எனவே, எங்கள் நிறுவனத்துக்கு தர வேண்டிய மீதமுள்ள தொகையை  வட்டியுடன் செலுத்தும் வரை ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

Related Stories: