×

சிங்கள தீவை கோலோச்சிய கடைசி தமிழனை அறிவோம்

சங்க இலக்கியங்களில் போற்றப்படும் மன்னர்களின் அழகுக்கு, போர்களில் பங்கேற்று அவனது உடல் தாங்கிய வீரத்தழும்புகளே அணி சேர்க்கும்.  இத்தகைய வீரத்தழும்புகள், அடையாளங்கள் மன்னனுக்கு மட்டுமல்ல, மண்ணுக்கும் அந்த பெருமை சேர்க்கும். அத்தகைய போர்க்கள தழும்புகளை தாங்கி இன்றும் வேலூருக்கு பெருமை சேர்க்கும் அடையாளம்தான் வேலூர் கோட்டையுடன், அது அமைந்துள்ள  தொண்டை மண்டலத்தில் நிறைந்துள்ள தக்கோலம், வந்தவாசி, தெள்ளாறு, சோளிங்கர், ஆம்பூர் என போர்கள் நடந்த களங்கள், பள்ளிப்படை  கோயில்கள் என பெருமைமிகு சின்னங்களால் இந்த மண் பெருமிதத்துடன் திகழ்கிறது.இத்தகைய சிறப்புகள் நிறைந்த தொண்டை மண்டலத்தின் பெருமை மிக்க வேலூரில்தான் அன்னியர்களால் வீழ்த்தப்பட்ட மைசூர்புலி திப்புசுல்தானின்  குடும்பத்தினரும், சிங்களத்தீவை ஆண்ட கடைசி  தமிழ் மன்னன் என போற்றப்படும் விக்கிரமராஜசிங்கனும், அவனது குடும்பத்தாரும்  அடைபட்டிருந்தனர்.

இந்த அரசனின் வரலாற்றை அவனது புதைந்துபோன கல்லறையுடன் தோண்டியெடுத்து அவனுக்கு முத்துச்சிப்பி வடிவில் நினைவகம் அமைத்து  உலகுக்கு காட்டிய பெருமை அன்றைய முதல்வர் கருணாநிதியை சேரும். அப்படி கருணாநிதியின் கருத்தை கவர்ந்த அந்த மன்னன்  விக்கிரமராஜசிங்கன் என்ற கண்ணுச்சாமி. கண்டியை ஆட்சி செய்த சிங்கள மன்னர்கள் தமிழகத்தின் மதுரை, தஞ்சையை ஆண்ட தெலுங்கு நாயக்கர்  வம்சத்தில் இருந்து பெண் எடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். அதனால், கண்டியை ஆளும் வாய்ப்பு தமிழகத்து நாயக்கர்களுக்கு  கிடைத்தது.அதன்படி, தமிழகத்தை சேர்ந்த விஜயராஜசிங்கன் கண்டியின் முதல் தமிழ் மன்னர் ஆனார். இவருக்கு வாரிசு இல்லாததால் இவருக்கு பின்  மைத்துனர் கீர்த்தி ராஜசிங்கன் அப்போது வழக்கத்தில் இருந்த ‘மருமக்கட்தாயம்’ என்ற முறைப்படி ஆட்சிக்கு வந்தார்.

அவருக்கு பின்னர் அவரது தம்பி ராஜாதி ராஜசிங்கனுக்கும் வாரிசு இல்லாததால் அவரது பட்டத்து ராணியின் தங்கை சுப்பம்மாளும் அவரது மகன்  கண்ணுசாமியும் மதுரையில் இருந்து கண்டிக்கு அழைக்கப்பட்டனர். இதையடுத்து 1798ல் கண்ணுச்சாமி விக்கிரம ராஜசிங்கன் என்ற பெயருடன் கண்டி  அரியணை ஏறினார்.அப்போது அவனது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சிங்களன் பிலிமாத்தளை, கண்டி அரசனை அகற்றி அங்கு தான்  அரசனாக அமரும் சூழ்ச்சிகளை மேற்கொண்டு, பிரிட்டிஷாருக்கும், விக்கிரமராஜசிங்கனுக்கும் இடையில் போர் உருவாகும் சூழலை ஏற்படுத்தினான். அதற்கேற்ப கடைசியாக 1815ல் நடந்த போரில் விக்கிரம ராஜசிங்கனை வீழ்த்தி கண்டியை தம் வசப்படுத்தினர். தொடர்ந்து விக்கிரம ராஜசிங்கனும்,  அவனது 3 மனைவிகள், குழந்தைகள், பேரப்பிள்ளைகள் உள்ளிட்டோரும் தமிழகத்தில் வேலூர் கோட்டையில் காவலில் வைக்கப்பட்டனர். கண்டி  மகால் என்ற அந்த கட்டிடம்தான் சமீப காலம் வரை பத்திரப்பதிவு அலுவலகமாக இயங்கி வந்தது.

அங்கு சிறை வைக்கப்பட்டு, 1832 ஜனவரி 30ல் தனது 52வது வயதில் ராஜசிங்கன் காலமானார். அவரை தொடர்ந்து அவனது மனைவிகளும்  இறந்தனர். அதன் பிறகு அவரது வாரிசுகளை வேலூர் கோட்டையில் இருந்து தஞ்சை கண்டி ராஜா அரண்மனைக்கு மாற்றியது பிரிட்டிஷ் அரசு.இவர்களது கல்லறைகள் வேலூர் பாலாற்றங்கரையில் மண்ணில் புதைந்து மறைந்து போன நிலையில் 1990ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி,  கண்டி அரசன் விக்கிரமராஜசிங்கனின் பெரும்புகழை வெளிப்படுத்தியதுடன், அவனது கல்லறை மற்றும் அவனை சார்ந்தவர்களின் கல்லறையை  சீரமைத்து முத்துமண்டபமாக மாற்றி, அதனை ஒரு வரலாற்று சுற்றுலாதலமாகவும் மாற்றினார்.

வெளியூர், வெளிமாநில மக்கள் பெருமளவில் வந்து செல்லும் வேலூர் புதிய பஸ் நிலையம் அருகில் இருந்தாலும், பெருமளவில் அறியப்படாத  இடமாக உள்ளதால், அதை மேம்படுத்தி பொதுமக்கள் அறியும் வண்ணம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே வரலாற்று  அவர்களின் கருத்தாக உள்ளது.



Tags : Tamil Nadu ,Sinhala , We know the last Tamil of the Sinhala island colossus
× RELATED சதுப்பு நிலங்களை அடையாளம் காணும்...