×

பெண் எஸ்.பி பாலியல் புகார் கொடுத்த விவகாரம் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான விசாரணை சிபிசிஐடிக்கு அதிரடியாக மாற்றம்: செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் வழிமறித்த ஐபிஎஸ் அதிகாரி மீதும் பாய்கிறது வழக்கு; டிஜிபி திரிபாதி உத்தரவு

சென்னை: சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் தனது காரில் பெண் எஸ்.பிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில், திடீர் திருப்பமாக விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ் பணியாற்றி வந்தார். முதல்வர் நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு அதிகாரியாக ராஜேஷ்தாஸ் சென்றபோது, பணியில் இருந்த பெண் எஸ்.பியை, பாதுகாப்பு தொடர்பாக பேச வேண்டும் என்று கூறி, தனது காரில் ஏற்றியுள்ளார். சிறிது நேரத்தில் பெண் எஸ்.பி அதிர்ச்சியுடன் காரில் இருந்து வேகமாக இறங்கி சென்றார்.

பிறகு அன்றைய தினமே பெண் எஸ்.பி. சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது பாலியல் புகார் அளிக்க சென்னைக்கு காரில் வந்துள்ளார். இதை அறிந்த ராஜேஷ்தாஸ் தனக்கு நெருக்கமான செங்கல்பட்டு எஸ்.பி.யை சமாதானம் பேச அனுப்பியுள்ளார்.
செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி கண்ணன் மற்றும் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையம் இன்ஸ்பெக்டர் சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உள்ளிட்ட காவலர்கள் பெண் எஸ்.பி. வந்த இனோவா காரை வழிமறித்து, அவரிடம் சமாதானம் பேசி திருப்பி அனுப்ப முயற்சி செய்துள்ளனர். ஆனால் அதை ஏற்காமல் அந்த பெண் சென்னைக்கு காரில் புறப்பட்டார். அப்போது, பெண் எஸ்.பியின் கார் சாவியை செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் எடுத்து வைத்து கொண்டதாக கூறப்படுகிறது.

அப்போது பெண் எஸ்.பி ‘உங்கள் குடும்ப பெண்ணுக்கு இதுபோன்று நடந்து இருந்தால் இப்படி தான் சாவியை எடுப்பீர்களா’ என்று கூறிவிட்டு பெண் எஸ்.பி கண்ணனிடம் இருந்த சாவியை பிடிங்கி கொண்டு வேகமாக சென்னைக்கு புறப்பட்டார். பெண் எஸ்.பியை செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி வழிமறித்து சமாதானம் செய்த சம்பவங்கள் அனைத்தும் செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் உள்துறை செயலாளர் பிரபாகர் மற்றும் டிஜிபி திரிபாதியிடம் நேரடியாக சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது தனது கைப்பட எழுதிய புகார் மனுவாகவும், தன்னை புகார் அளிக்க விடாமல் செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் தடுத்ததாக கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

பெண் எஸ்.பி அளித்த புகாரின் படி உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி திரிபாதி ஆகியோர் ரகசியமாக விசாரணை நடத்தி வந்தனர். பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு நடந்த பாலியல் தொந்தரவு குறித்து தமிழ் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசை பணி நீக்கம் செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரி கண்டன அறிக்கை வெளியிட்டார். அதேபோல், நாடாளுமன்ற திமுக குழு துணை தலைவர் கனிமொழி, தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோரும் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் செயலுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, உள்துறை செயலாளர் பிரபாகர் வேறு வழியின்றி சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசை அதிரடியாக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி பதவியில் இருந்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டார்.

மேலும், பாலியல் புகார் குறித்து விசாரிக்க, கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 6 பேர் கொண்ட விசாரணைக் குழு (விசாகா கமிட்டி) அமைத்து உத்தரவிட்டார். அதைதொடர்ந்து சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசிடம் 6 பேர் கொண்ட விசாரணை குழு தனது முற்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர். இதற்கிடையே நாளிதழில் வந்த செய்தியை மையமாக வைத்து மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. பெண் எஸ்.பிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் தொடர்பாக 2 வாரத்தில் உள்துறை செயலாளர் பிரபாகர் மற்றும் டிஜிபி திரிபாதி ஆகியோர் அறிக்கை அளிக்க வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி துரை ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் விழுப்புரம் எல்லையில் பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து தனது விசாரணையை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஜேஷ்தாஸ் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்ய கூடும் என்று கூறப்படுகிறது. பாலியல் புகார் ஒன்றும் மற்றொன்று பெண் எஸ்.பியை புகார் கொடுக்க விடாமல் தடுத்தது என இரண்டு வழக்குகள் தனித்தனியாக பதிவு செய்ய கூடும் என்று கூறப்படுகிறது.

ராஜேஷ்தாஸ் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்யும் பட்சத்தில், உடனே ராஜேஷ்தாஸ் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், பெண் எஸ்.பி தனக்கு நேர்ந்த கொடுமையை புகார் அளிக்க விடாமல் தடுத்த செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. கண்ணன் மீது தனியாக வழக்கு பதிவு செய்யக் கூடும் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய இன்ஸ்பெக்டர் சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உள்ளிட்டோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். ஆனால் ராஜேஷ்தாசுக்கு அனைத்து வகையிலும் உடந்தையாக இருந்த செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன் மீது மட்டும் இது வரை தமிழக அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே குற்றத்திற்கு உடந்தையாக இருந்த செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகளின் கோரிக்கையாக உள்ளது.சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசுக்கு எதிராக பிடி இறுகி வருவதால் அவருக்கு ஆதரவாக செயல்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் தற்போது கலக்கத்தில் உள்ளனர்.

Tags : DGP ,Rajeshthas' ,CPCID ,Tripathi , Special DGP Rajeshthas' case filed against female SP for sexual harassment transferred to CPCID Order of DGP Tripathi
× RELATED வழக்கில் இரு நீதிமன்றங்களால்...