அனல் பறக்கும் தேர்தல் களம்.. தென் மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக : அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 22 தொகுதிகள் ஒதுக்க முடிவு எனத் தகவல்.

சென்னை : அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 22 தொகுதிகளும் பாமகவுக்கு 23 தொகுதிகளும் ஒதுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.  

அந்த வரிசையில் அதிமுக – பாஜக கூட்டணி தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இன்று காலை 8.30 மணிக்கு தொடங்கியது. சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் தமிழக பாஜகத் தலைவர் எல்.முருகன், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவி உள்ளிட்டோர் முதற்கட்ட ஆலோசனையில் ஈடுபட்டனர். முதல்வர் இல்லத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு, துணை முதல்வர் ஓபிஎஸையும் சந்தித்துள்ளனர்.

இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 22 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தென் மாவட்டங்களில் அதிமுக முக்கிய பிரமுகர்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளை பாஜக கேட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்த சந்திப்பு குறித்து கிஷன் ரெட்டி கூறுகையில், எந்தெந்த தொகுதிகள், எத்தனை தொகுதிகள் என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும் எனத் தெரிவித்தார்.இதற்கிடையில், இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வரவிருக்கிறார். இத்தகைய சூழலில் தமிழக பாஜக பொறுப்பாளர்கள் முதல்வர், துணை முதல்வரை சந்திப்பது முக்கியத்துவம் பெறுகிறது. அமித்ஷா அதிமுக, பாமக, தேமுதிகவினருடன் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார்.

இதனிடையே அதிமுக - பாமக இடையே தொகுதி பங்கீடு இன்று இறுதி செய்யப்படுகிறது. மாலை 5 மணிக்கு மேல் சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: