குமாரபாளையம் தொகுதியில் மின்சாரத்துறை அமைச்சருக்கு ‘ஷாக்’ கொடுக்கும் பாஜ நிர்வாகி: சீட் கிடைக்காவிட்டாலும் போட்டியிட முடிவு

குமாரபாளையம்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதியில் அமைச்சர் தங்கமணிக்கு எதிராக, கூட்டணியில் இருக்கும் பாஜக பிரமுகர் களமிறங்க ஆயத்தமாகி வருகிறார். இது அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக-பாஜ கூட்டணி இறுதியாக உறுதி செய்யப்பட்டாலும் குடைச்சல்களுக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமே இல்லை. இதில் தமிழக மின்சாரத்துறை அமைச்சரின் குமாரபாளையம் தொகுதியில் அவருக்கே ஷாக் கொடுக்கும் வகையில் அதிரடி கிளப்பி வருகிறார் பாஜக பிரமுகர் ஓம் சரவணா. இவர், குமாரபாளையம் தொகுதி சீட், இந்த முறை கூட்டணியில் இருக்கும் தாமரைக்குத்தான் என்று கூறி வலம் வந்து வாக்கு சேகரித்துக் கொண்டிருக்கிறார்.

 அதேநேரத்தில் குமாரபாளையம் தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து கட்சி தலைமையிடம் மனு கொடுத்துள்ளார் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி. இதனால் இப்போது இந்த தொகுதி பரபரப்பின் உச்சமாக நிற்கிறது.இதுகுறித்து உள்ளூர் பாஜ நிர்வாகிகள் கூறுகையில், ‘‘குமாரபாளையத்தில் பிரபலமான கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார் ஓம்சரவணாவின் தந்தை. இதனால் மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில் ஓம்சரவணாவிற்கு நல்ல அறிமுகம் உள்ளது. இவர் கட்சியை தவிர்த்து உள்ளூரில் மக்கள் அமைப்பு ஒன்றையும் நடத்தி வருகிறார். இதற்கும் மேலாக டெல்லி தலைமையிடமும் மிகவும் நெருக்கமாக இருக்கிறார்.

இதனால் மினிஸ்டர் தொகுதியில் அவரை களமிறக்க, பாஜ தலைமை ஆர்வம் காட்டி வருகிறது. தனக்கு சீட் கிடைக்காவிட்டால், மினிஸ்டருக்கு எதிராக களமிறங்கி, தனது செல்வாக்கால் கணிசமான வாக்குகளை பிரிக்கவும் ஆயத்தமாகி வருகிறார்’’ என்றனர்.

Related Stories: