×

அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் நிரந்தரமாக ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்க வழக்கு: கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்

மதுரை: நிரந்தர ஜல்லிக்கட்டு மைதானம் அமைப்பது குறித்து கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், மோர்பண்ணையைச் சேர்ந்த வக்கீல் தீரன் திருமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டாக ஜல்லிக்கட்டு உள்ளது. இது மஞ்சுவிரட்டு மற்றும் ஏறுதழுவுதல் என்ற பல பெயர்களில் நடத்தப்படுகிறது. கலாச்சார அடையாளமாகவும் உள்ளது. மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு உலக பிரசித்தி பெற்றவை. இதைக் காண பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருவது வழக்கம். ஆனால், நேரடியாக வருவோருக்கு போதுமான இட வசதிகள் இல்லை. இதேபோல் முறையான கேலரி வசதியும் இல்லை. கூட்ட நெரிசலில் சிக்கித் திணறும் நிலை உள்ளது.

மரத்தின் மீதும், வீட்டின் மாடிகளிலும் நின்றும் காணும் நிலை உள்ளது. இதனால் லட்சக்கணக்கானோர் ஜல்லிக்கட்டு போட்டிகளை ரசிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் லட்சக்கணக்கான பார்வையாளர்கள் அமரும் வகையில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் நிரந்தர மைதானமும், கேலரியும் அமைக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி ஆர்.ஹேமலதா ஆகியோர், மனுதாரர் தனது கோரிக்கை குறித்து 4 வாரத்திற்குள் கலெக்டரிடம் புதிதாக மனு அளிக்க வேண்டும். அந்த மனுவின் மீது சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்து 6 வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கொள்ளப்படும் நடவடிக்கையின் விபரத்தை மனுதாரருக்கு தெரியப்படுத்த வேண்டுமென உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தனர்.

Tags : Stillage Ground ,Kalamedu, Avaniapuram , Case to set up permanent jallikkattu ground at Alankanallur, Palamedu, Avanyapuram: Collector instructed to take appropriate action
× RELATED இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு...