கொரோனா தொற்றால் தமிழகத்தில் 26 சுகாதார பணியாளர்கள் மரணம் : மருத்துவர்கள் 11 பேர் உயிரிழப்பு

சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்றால் 26 சுகாதார பணியாளர்கள் மரணம் அடைந்துள்ளனர். இவர்களில் மருத்துவர்கள் மட்டும் 11 பேர்.தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு உச்சத்தில் இருந்த காலத்தில் முன்கள பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்பினர்கள், காவல் துறையினர் உள்ளிட்டோரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் பலர் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தனர்.

இவ்வாறு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தவர்களுக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால் இப்போது நிவாரணத் தொகையை ரூ.25 லட்சமாக குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கிடையில் முன்கள பணியாளர்களுக்கு உரிய நிவாரணத் தொகை கிடைக்கவில்லை என்று மருத்துவ சங்கங்கள் தெரிவித்துள்ளனர். எனவே  பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதைத்தவிர்த்து கொரோனா தொற்றால் மரணம் அடைந்த முன்கள பணியாளர்களின் விவரங்களை தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்காமல் உள்ளதாக மருத்துவ பணியாளர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டு கூறி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள்  89 பேர் கொரோனா தொற்றால் மரணம் அடைந்து இருப்பதாக இந்திய மருத்துவ சங்கம் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஆனால் இது தொடர்பாக தமிழக அரசு எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை.

இந்நிலையில் தமிழகத்தில் 26 மருத்துவர்கள் மரணம் அடைந்துள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவல் மூலம் தெரியவந்துள்ளது. மரணம் அடைந்த முன்கள பணியாளர்களுக்கு  மத்திய அரசின் காப்பீடு திட்டத்தின் கீழ் ரூ. 50 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி தமிழகத்தில் தற்போது வரை 11 மருத்துவர்கள், 7 செவிலியர்கள், 11 மருத்துவ பணியாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் தமிழகத்தில் 26 மருத்துவ பணியாளர்கள் மரணம் அடைந்துள்ளது தெரியவந்துள்ளது.இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 87 பேருக்கும், ஆந்திராவில் 44 பேருக்கும், கர்நாடகாவில் 40 பேருக்கும், ராஜஸ்தானில் 33 பேருக்கும், குஜராத், தெலங்கானா, உ.பியில் 28 பேருக்கும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த படியாக தமிழகத்தில் 26 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

Related Stories:

More
>