×

மோடியின் குற்றச்சாட்டு பொய்களின் மூட்டை : திரிணாமுல் எம்பி குற்றச்சாட்டு

கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பாஜக தீவிரமாகப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. பிரதமர் மோடி இந்த மாதத்தில் 2வது முறையாக மேற்கு வங்கத்துக்கு நேற்று பயணம் மேற்கொண்டார். கொல்கத்தாவில் மெட்ரோ ரயில் போக்குவரத்தைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், ‘ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கமிஷன் அரசு. அனைத்துப் பணிகளுக்கும் கமிஷன் எதிர்பார்க்கிறது. மேற்கு வங்கத்தில் தொழில்துறை நசிந்துவிட்டு, வேலையின்மை அதிகரித்துவிட்டது. மக்களின் வாழ்வாதாரம் குறைந்துவிட்டது’ என்று குற்றச்சாட்டு கூறினார்.

இதற்கு பதிலடி கொடுத்து திரிணமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன், ‘மக்களின் வாழ்வாதாரம் குறைந்துவிட்டதாகப் பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 2010ம் ஆண்டு மக்களின் சராசரி வருமானம் ரூ.51,543 ஆக இருந்தது. ஆனால், 2019ல் ரூ.1.09 லட்சமாக உயர்ந்துள்ளது. வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை மேற்குவங்கத்தில் 89 லட்சம் சிறு தொழில்கள் செயல்பட்டு வருகின்றன. துர்கா பூஜை நடத்த மம்தா அனுமதிக்கவில்லை என்று பிரதமர் மோடி கூறினார். ஆனால், 2020ம் ஆண்டு துர்கா பூஜையின்போது ஒவ்வொரு பூஜா மண்டலுக்கும் ரூ.50 ஆயிரம் நிதியுதவியை மம்தா அரசு வழங்கியது.

பிரதமர் மோடியின் பேச்சு பொய்களின் மூட்டை. உண்மையை ஆய்வு செய்யவில்லை. திரிணமுல் காங்கிரஸ் கட்சியைக் கேள்வி கேட்கும் முன் பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஏன் தடுக்கவில்லை என்பதற்கான காரணத்தைப் பிரதமர் மோடி விளக்க வேண்டும். விவசாயிகள் பிரச்னையைத் தீர்க்க ஏன் முயற்சி எடுக்கவில்லை என்பதையும் விளக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Tags : Modi ,Trinamool , திரிணாமுல்
× RELATED மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்...