×

5 மடங்கு கடன் வாங்கி கமிஷன் அடித்த அதிமுக ஆட்சியில் பிறக்கும் குழந்தையின் தலையில் கூட கடன் சுமை: பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதும் புறக்கணிப்பு : மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: ஐந்து மடங்கு கடன் வாங்கி கமிஷன் அடித்த அதிமுக ஆட்சியில், பிறக்கும் குழந்தையின் தலையில் கூட 62 ஆயிரத்துக்கும் மேல் கடன் சுமை ஏற்றப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதையும் திமுக புறக்கணிக்கும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: நாட்டு மக்களின் நலனை அறவே புறக்கணித்து, தொடர்ந்து முறைகேடுகள் செய்து, தம்மையும் தம்மைத் தாங்கிப் பிடிக்கும் பினாமிகளையும் மேலும் மேலும் வளப்படுத்திக் கொள்வதற்காகவே, கடன் வாங்கி, தமிழக மக்கள் தலையில் 5.70 லட்சம் கோடி ரூபாய் கடனைச் சுமத்தியுள்ள முதல்வர் பழனிசாமி மற்றும் நிதியமைச்சரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு, திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆறாவது சம்பளக் கமிஷனை அமல்படுத்தி - பொருளாதார தேக்க நிலைமை இருந்த நிதியாண்டில் கூட, உபரி நிதிநிலை அறிக்கையை விட்டுச் சென்றது திமுக ஆட்சி.

ஆனால் 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில்-தொடர் வருவாய்ப் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை என்று எல்லா நிலைகளிலும், மிக மோசமானதொரு நிதி நிர்வாகத்தைக் கையாண்டு-வருமானத்திற்கு மீறிய சொத்துக்குவிப்புப் புகாருக்கு உள்ளாகியுள்ள நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், முதல்வர் பழனிசாமியும் தமிழக மக்களுக்கு, என்றும் எளிதில் நீங்காத மாபெரும் நிதிப்பேரிடரையும், நிதி நெருக்கடியையும் உருவாக்கி விட்டார்கள். 2006-2011 வரையிலான திமுக ஆட்சியில் வாங்கிய கடன் வெறும் 44 ஆயிரத்து 84 கோடி ரூபாய் மட்டுமே. ஆனால் தற்போது அதிமுக ஆட்சியில் வாங்கப்பட்டுள்ள கடன் மட்டும் 3.55 லட்சம் கோடி. இது இறுதிக் கணக்கு வரும் போது இன்னும் அதிகரிக்கும். கொரோனா பேரிடருக்கு முன்பே-அதாவது 2018ம் ஆண்டிலேயே 68 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் காணாமல் போய்-நிதி நிலைமை மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி விட்டது. 2003ம் ஆண்டு தமிழ்நாடு நிதி நிலை நிர்வாகப் பொறுப்புடைமைச் சட்டம் வந்த பிறகு தமிழக வரலாற்றில் கடனை வாங்கி கடனுக்கு வட்டி கட்டும் ஒரே அரசு அதிமுக அரசு. இதுவா வெற்றி நடை போடும் தமிழகம். கடன் சுமையில் தள்ளாடும் தமிழகம் அல்லவா.

தேர்தலுக்கு முன் பணிகளை மேற்கொண்டு நிறைவேற்ற முடியாது என்று நன்கு அறிந்திருந்தும் கூட, கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட மதிப்புள்ள டெண்டர்களை விடுத்து-அரசு கஜானாவை காலி செய்துள்ளார் முதல்வர். அதிமுக ஆட்சியில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் 78,854.25 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.  அதிமுக ஆட்சியில் தொடர்ந்து அதிகரித்து வரும் வருவாய் பற்றாக்குறையால் கடன் அதிகரித்து வருகிறது. இன்றைக்கு தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவர் தலையிலும்-ஏன் பிறக்கும் குழந்தையின் தலையில் கூட, 62 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் கடனை அதிமுக அரசு சுமத்தி விட்டுச் செல்கிறது. பெட்ரோல் - டீசல் மூலம் தமிழக அரசுக்குக் கிடைத்த 87 ஆயிரம் கோடி எங்கே போனது என்றே தெரியவில்லை. கொரோனா காலத்தில் வாங்கும் கடன்களிலும் கமிஷன் அடிப்பதை பழனிசாமியும், அவர் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களும்-நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அமைச்சரவைப் பணி போல் செய்து-“கடைசி நேர டெண்டர்கள்” “கடைசி நேர கமிஷன்களுக்கு” தலையாய முக்கியத்துவம் கொடுத்து, முறைகேடுகளில் மூழ்கி இருக்கிறார்கள்.

தமிழக நிதி மேலாண்மை தறிகெட்டுப் போனதற்கு, இந்த இணைந்த ஊழல் கரங்கள்தான் காரணம். தமிழக நிதி மேலாண்மை வரலாற்றில் நிதியமைச்சராக இருக்கும் பன்னீர்செல்வமும், முதல்வர் பழனிசாமியும்-ஏன் அதிமுக ஆட்சியும் ஒரு அழிக்க முடியாத கரும்புள்ளியை ஏற்படுத்தியிருக்கிறார்கள். தமிழ்நாடு நிதி நிலை நிர்வாகப் பொறுப்புடைமைச் சட்டத்தின் கீழ் “நிதி நிலை அறிக்கையின் இலக்கு குறித்து” ஆறு மாதத்திற்குள் வைக்க வேண்டிய ஆய்வு அறிக்கையைக் கூட தாக்கல் செய்யாத, தனது அலுவல் பொறுப்பு உணராத ஒரே நிதியமைச்சர் - நாட்டில் நிதி மேலாண்மையில் தோற்றுப் போன மிக மோசமான ஒரு நிதியமைச்சர் என்றால்-அது ஓ.பன்னீர்செல்வமாகவே இருக்கும்.இப்படியொரு நிதியமைச்சரை இதுவரை தமிழகம் கண்டதில்லை.

அந்த அளவிற்கு ஒரு கேடுகெட்ட நிதி நிர்வாகத்தை அளித்துள்ள முதல்வரையும் இதுவரை தமிழகம் பார்த்ததில்லை.தமிழக மக்கள் ஒவ்வொருவரின் தலையிலும் கடனைச் சுமத்தி விட்டு-திமுக ஆட்சியில் இருந்ததை விட ஐந்து மடங்கு கடனை வாங்கி ஊழலில் திளைத்து சுகமான ஆட்சி நடத்தி-வெற்று அறிவிப்புகளைச் செய்தே  காலம் கடத்தி, கடைசி நேரத்தில் காரியத்திற்கு ஆகாத கல்வெட்டுகளைத் திறந்து வைத்து, அனைத்துத் துறைகளிலும் படுதோல்வியடைந்த ஒரு அவல ஆட்சியைக் கொடுத்து விட்டுச் செல்வோரின் கடைசி நிதி நிலை அறிக்கை (இடைக்கால நிதி நிலை அறிக்கை) உரையையும் - கூட்டத் தொடரையும் திமுக புறக்கணிக்கிறது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக மக்களின் பேராதரவுடன், திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் - “ஊழலுக்கு இணைந்த அதிமுகவின் இந்தக் கறைபடிந்த கரங்கள்”-ஒரு அரசின் செலவுகளில், கடனுக்கு வட்டி கட்டுவதே இரண்டாவது பெரிய செலவு என்ற அளவிற்கு நிதி மேலாண்மையில் ஏற்படுத்தியுள்ள அனைத்து முறைகேடுகளையும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுத்து-தமிழகத்தின் நிதி நிலைமை-தமிழக மக்களுக்காக - தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக-என்பதை உறுதிப்படுத்திடும் வகையில் வேகமாகச் சீரமைக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : BC ,Q. ,Stalin , Debt burden even on the head of a child born under the AIADMK regime who scored 5 times the commission: MK Stalin's announcement
× RELATED ரூ.8 லட்சம் மோசடி: பெண் காவலர் மீது வழக்கு