×

கல்லூரியில் மட்டும் படித்தால் கிடையாது பள்ளிபடிப்பை தமிழ் வழியில் படித்தோருக்கே இடஒதுக்கீடு: சட்டதிருத்தம் எதிர்த்த மனு தள்ளுபடி

மதுரை: தமிழ் வழி இட ஒதுக்கீடு சட்டத் திருத்தத்தை எதிர்த்த மனு ஐகோர்ட் கிளையில் தள்ளுபடியானது.திருச்சி, நாச்சிகுறிச்சையைச் சேர்ந்த சன்மதி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் ெசய்த மனுவில், ‘‘அரசுப்பணிகளில் தமிழ் வழி கல்வியில் படித்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி, 10+2+3 முறையில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு கிடைக்கும். இதனால் பலரும் பாதிப்பர். எனவே, குறிப்பிட்ட பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதியை, மட்டும் தமிழ் வழியில் பயின்றிருந்தால் போதும் என உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர், ‘‘சட்டத்திருத்தம் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகவோ, விதிமீறல் என்றாலோ தான் நீதிமன்றம் தலையிட முடியும். எனவே, 10+2+3 ஆகிய மூன்று நிலைகளிலும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அரசு பள்ளியில் படித்தோரும், ஏழை மாணவர்களும் இதனால் பயன்பெற முடியும். மனுதாரர் கல்லூரி படிப்பை தமிழ் வழியில் படிப்பது இட ஒதுக்கீட்டிற்காக மட்டுமே. இவருக்கு எப்படி இட ஒதுக்கீடு வழங்க முடியும். இட ஒதுக்கீடு என்பது பள்ளிப்படிப்பை தமிழ் வழியில் படித்தோருக்கு தான்.

இதில் விதிமீறல் இல்லை.  அரசு பள்ளிகளில் மாநில மொழிக்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. கிராமப்புற ஏழை மாணவர்கள் அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் தான் படிக்கின்றனர். அவர்கள் பயனடைவதற்காகத்தான் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என உத்தரவிட்டனர்.

Tags : College, Schooling, Tamil Way, Reservation:
× RELATED ஆரணி நகரில் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த காளைமாடு