×

தங்கவயல் நகரில் பெட்ரோல் பங்க், மருந்தகம் 24 மணி நேரமும் இயங்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

தங்கவயல்: தங்கவயல்  நகரில் இயங்கிவரும் பெட்ரோல் பங்க் மற்றும் மருந்து விற்பனை கடைகள் 24 மணி  நேரமும் இயங்கும் வகையில் அரசியல் கட்சிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது. தங்கவயலில் மட்டுமே 2  லட்சத்திற்கும் அதிகம் மக்கள் தொகை உள்ளது. அதன் சட்டப்பேரவை தொகுதிக்கு  உட்பட்ட பேத்தமங்கலம், கேசம்பள்ளி, சுந்தரபாளையம், ராபர்ட்சன்பேட்டை ஆகிய  நான்கு ஒன்றியங்கள் உள்ளன. தங்கவயல் ராபர்ட்சன்பேட்டையில் 5 மற்றும்  ஆண்டர்சன்பேட்டையில் 1 என மொத்தம் 6 பெட்ரோல் பங்க்குகள் உள்ளன.

இவைகள்  இரவு 10 மணிக்கு மேல் மூடப்பட்டு மறுநாள் காலை 6 மணிக்குத்தான்  திறக்கப்படுகிறது. இரவு நேரத்தில் அவசர தேவைக்கு பெட்ரோல், டீசல் போட  வேண்டுமானால் பெரும் கஷ்டப்படும் சூழ்நிலை நிலவுகிறது. மாரடைப்பு,  மகப்பேறு, சாலை விபத்து போன்ற அவசர சமயத்தில் பாதிக்கப்படுவோரை சம்பராம்,  ஆர்.எல்.ஜாலப்பா, பி.இ.எஸ். மருத்துவமனைகள் அல்லது பெங்களூருவில் உள்ள  மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல வாகனம் தயார் செய்தாலும் பெட்ரோல்  பங்க்குகள் மூடப்பட்டுள்ளதால் சிரமம் ஏற்படுகிறது.
டவுன்  முனிசிபாலிட்டியாக இருக்கும் பங்காருபேட்டையில் 24 மணி நேரமும் பெட்ரோல்  பங்குகள் இயங்கும் போது நகரசபையாக இருக்கும் தங்கவயலில் மட்டும் ஏன்  திறக்கக்கூடாது?. மேலும் ராபர்ட்சன்பேட்டை, ஆண்டர்சன்பேட்டை, உரிகம் உள்பட  நகரில் 50க்கும் மேற்பட்ட மருந்து விற்பனை கடைகள் உள்ளன. இதில் விரல்  விட்டு எண்ணக்கூடிய சில கடைகள் மட்டும் இரவு 11.30 மணி வரை  திறந்திருக்கிறது. பெரும்பான்மையான கடைகள் இரவு 9 மணிக்கு மூடப்படுகிறது.

அவசரமாக மருந்து, மாத்திரைகள்  தேவைப்படும் சமயத்தில் கடைகள் திறக்காமல் இருப்பதால், பெரியளவில் பாதிப்பு  ஏற்படுகிறது. இதை தவிர்க்க 24 மணி நேரமும் மருந்து கடைகள் இயங்க வேண்டும்.  ஒரே கடைகள் இயக்குவதற்கு பதிலாக வாரத்திற்கு ஒரு கடை என்ற வகையில் சுழற்சி  முறையில் திறந்தாலும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். தங்கவயல்  தொழில் மற்றும் வர்த்தக சபை நிர்வாகிகள் இந்த விஷயத்தில் கவனம் செலுத்த  வேண்டும். மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்பினரும் இது  தொடர்பாக பெட்ரோல் பங்க் மற்றும் மருந்து விற்பனையாளர்களை அணுகி நிலைமையை  எடுத்துக் கூறி மனமாற்றம் செய்ய வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக  உள்ளது.



Tags : Thangavayal , Goldfields, petrol punk, pharmacy, public demand
× RELATED தமிழர்கள் அதிகம் குடியிருக்கும்...