×

துரைமுருகன் பேச அனுமதி மறுப்பு!: தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை முழுமையாக புறக்கணித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு..!!

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் பேச சபாநாயகர் அனுமதிக்காததால் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் இடைக்கால பட்ஜெட் உரையையும் திமுக உறுப்பினர்கள் புறக்கணித்தனர். திமுக-வை தொடர்ந்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்களும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை கலைவாணர் அரங்கில் கூடிய பேரவையில் துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2021-22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 11வது முறையாக ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். 15வது சட்டப்பேரவையின் கடைசி கூட்டத்தொடர் என்பதால் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவை தொடங்கிய உடன் தனது கருத்தை தெரிவிக்க துரைமுருகனை சபாநாயகர் அனுமதிக்காததால் சர்ச்சை எழுந்தது. துரைமுருகன் குறுக்கிட்டு பேச சபாநாயகர் அனுமதி மறுத்ததால் அவையில் அமளி ஏற்பட்டது. இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய ஓ.பி.எஸ்.சை அழைத்து விட்டதால் துரைமுருகன் பேச சபாநாயகர் மறுப்பு தெரிவித்தார்.

மேலும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் மைக் அணைக்கப்பட்டதால் தொடர்ந்து முழக்கம் எழுப்பப்பட்டது. துரைமுருகன் பேசுவது அவைகுறிப்பில் அதிவாகாது என்று சபாநாயகர் அறிவித்ததற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இத்தகைய சலசலப்புக்கு இடையே ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையை தொடங்கினார். இதற்கிடையில் இடைக்கால பட்ஜெட் உரையை புறக்கணித்து சட்டப்பேரவை கூட்டத்தில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், திமுக ஆட்சி முடியும்போது ரூபாய் 1 கோடி கடன் தான் இருந்தது. அதிமுக ஆட்சியில் தமிழக அரசின் கடன் ரூபாய் 5.7 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது. நிதி நிர்வாகத்தை நிர்மூலமாக்கியது தான் அதிமுக அரசின் சாதனை என குறிப்பிட்டார். மேலும் தேர்தல் நேரத்தில் சுயநலத்திற்காக அதிமுக அரசு பணம் கொடுக்கிறது. தமிழக வளர்ச்சியை 50 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்து சென்றுவிட்டனர். தமிழகத்தின் நிதி நிலைமை திமுக ஆட்சிக்கு வந்ததும் சரி செய்யப்படும் என தெரிவித்தார்.


Tags : Duraimurugan ,Tamil Nadu , Thuraimurugan, Government of Tamil Nadu, Interim Budget, DMK, Outreach
× RELATED விடுதலைப் போராட்டத்தில்...