×

வேளாண் சட்ட எதிர்ப்பு: டூல் கிட் வழக்கு: திஷா ரவியிடம் விசாரணை நடத்த டெல்லி நீதிமன்றம் மேலும் ஒருநாள் அனுமதி..!!

டெல்லி: மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் கடந்த மாதம் 26-ந்தேதி குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி மேற்கொண்டனர். அப்போது ஒரு குழுவினர் செங்கோட்டையை முற்றுகையிட்டு செங்கோட்டை கோபுரத்தில் விவசாய சங்க கொடிகளை ஏற்றினர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது விவசாயிகளுக்கு ஆதரவாக சுவீடனைச் சேர்ந்த சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க் டூல்கிட் லிங்க் ஒன்றை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

மேலும், அந்த டூல்கிட்டை உருவாக்கியது பெங்களூருவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி மற்றும் மேலும் இருவர் என குற்றம்சாட்டிய போலீசார், அவரை கைது செய்து, தேசத்துரோகம் மற்றும் சதிச்செயல் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்தது. கைது செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தது. இந்தநிலையில்  மீண்டும் திஷா ரவியை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது திஷா ரவிக்கு நீதிபதி  மூன்று நாள் நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டார். மூன்று நாள் காவல் முடிந்ததும்  திஷா ரவி இன்று தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் டாக்டர் பங்கஜ் சர்மா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். டெல்லி காவல்துறை இன்று சுற்றுச்சூழல்  ஆர்வலர் திஷா ரவியிடம் விசாரணை நடத்த மேலும் ஐந்து நாள் நீதிமன்ற காவல் போலீசார் கோரினர்.

இதனையடுத்து, திஷா ரவியின் வழக்கறிஞர் சித்தார்த் அகர்வால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.சிறையில் கூட குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரிக்க போலீசாருக்கு  உரிமை உண்டு. அவரை ஏன் போலீஸ் காவலில் எடுக்க வேண்டும்? என்று அகர்வால் கேட்டார்.அவரது ஜாமீன் மனு மீதான உத்தரவு நாளை எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதனையடுத்து, டெல்லி நீதிமன்றம் ஒருநாள்  திஷா ரவியிடம் விசாரணை நடத்த அனுமதி வழங்கியது.

Tags : Delhi ,Tisha Ravi , Agricultural Laws, Tool Kit, Case, Disha Ravi, Delhi Court
× RELATED டெல்லி அலிபூரில் உள்ள கார்னிவல் சொகுசு விடுதியில் பயங்கர தீ விபத்து..!!