×

முதுமலையில் வளர்ப்பு யானைகளுக்கு உணவாகும் மூங்கில் நெல் கதிர்கள்

கூடலூர் : முதுமலையில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு மூங்கில் நெல்கதிர்கள் உணவாக அளிக்கப்படுகின்றன.நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு  யானைகள் முகாமில் 27 வளர்ப்பு யானைகள் உள்ளன. இவற்றிற்கான பிரத்யேக உணவு வகைகளான ராகி,கொள்ளு, அரிசி போன்றவற்றை வேகவைத்து பாகன்கள் வழங்கி வருகின்றனர்.

இருந்த போதும் வளர்ப்பு யானைகள் மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்குள் தினமும் அனுப்பபடுகின்றன. வனப்பகுதியில் வளர்ந்துள்ள செடி,கொடிகளை பறித்து பசியாறும் யானைகள் வனப்பகுதியில் ஓடும் மாயாறு,நீரோடை போன்றவற்றில் தாகம் தணித்து கொள்ளும். மீண்டும் மாலையில் முகாம் திரும்பும் போதும், தங்களுக்கு தேவையான உணவினை துதிக்கையில் பறித்து எடுத்து வருவது வழக்கம். ஒருசில நாட்களில் யானைகளின் பசிஅறிந்து அவற்றின் பாகன்கள் அவற்றிற்கு பிடித்தமான தென்னைமட்டை போன்றவற்றை பறித்து கொடுப்பதும் உண்டு.மேய்ச்சல் முடிந்து மாலையில் முகாம் திரும்பக் கூடிய சில யானைகள் அங்கு பாகன்களால் வெட்டி கட்டப்பட்ட  இலை, தழைகளை துதிக்கை மற்றும் தந்தத்தின் உதவியால் தூக்கி வருகின்றன.

தற்போது வனப்பகுதிகளில் மூங்கில்கள் பூத்து விட்ட நிலையில் மூங்கில் தழைகளுக்கு பதிலாக, மூங்கில் நெல் கதிர்களானது வனப்பகுதிகளில் இருந்து  யானைகளுக்கு உணவாக எடுத்து வரப்படுகிறது. இவற்றை வளர்ப்பு யானைகள் விரும்பி சாப்பிடுவதாக பாகன்கள் தெரிவித்தனர்.


Tags : Mudumalai , Cuddalore: Bamboo paddy is fed to domestic elephants in Mudumalai. Nilgiris District Cuddalore
× RELATED முதுமலை பகுதியில் சாலையில் சென்ற...