×

தோற்பதற்காக தொகுதி ஒதுக்கீடா?.. குமரி பாஜவில் குமுறல்

நாகர்காவில்: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது. குமரி மாவட்டத்தில் மக்களவை தேர்தல்களில் பாஜ வெற்றிபெற்றபோதிலும் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெறவில்லை. சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெறாமல் போவதற்கு கட்சி தலைவர்கள் சிலரது நடவடிக்கைகள் காரணம் என்று கட்சி தொண்டர்கள் குற்றம்சாட்ட தொடங்கியுள்ளனர். இந்தநிலையில் வரும் சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக, பாஜ தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படாத நிலையில் நாகர்கோவில், குளச்சல் தொகுதிகள் அதிமுகவிற்கு ஒதுக்கப்படுவதாக கூறி பாஜ கட்சியினர் அதிருப்தியடைந்துள்ளனர்.

சுய நலமிக்க தலைவர்களால் பாஜ வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ள குமரியின் நாகர்கோவில், குளச்சல் சட்டமன்ற தொகுதிகள் அதிமுகவிற்கு ஒதுக்குகிறார்கள் என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். 2016ல் அதிமுக அதிவேகமாக வளர்ச்சி அடைந்த வேளையிலும் குமரியில் இந்த இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வாக்கு விகிதத்தில் மூன்றாம் இடம் தான் பிடிக்க முடிந்தது. குமரி மாவட்ட பாஜக தொண்டர்கள் ஒரு பாஜக எம்எல்ஏவேனும் சட்டசபைக்கு செல்ல மாட்டாரா? என்ற ஏக்கத்தில் உள்ளனர். கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் நாகர்கோவில் தொகுதி மற்றும் குளச்சல் சட்டமன்ற தொகுதிகளில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரத்தில் அதிமுகவைவிட பாஜக அதிக வாக்குகளை பெற்றதை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஏற்கனவே கடந்த மக்களவை தொகுதியில் தோல்வியுற்ற நிலையில், தற்போது சட்டமன்ற பொதுத்தேர்தலுடன், எம்பி தொகுதி இடைதேர்தலும் சேர்ந்து வருவதால் எம்பி தொகுதியில் மீண்டும் தோல்வி ஏற்பட்டு இரு சட்டசபை தொகுதி வெற்றி பெற்றால் தலைவர்களின் செல்வாக்கு சரிந்துவிடும் என்பதால்தான் குளச்சல், நாகர்கோவில் தொகுதிகளை தவிர்த்து மற்ற தொகுதிகளை பாஜவுக்கு கட்சித் தலைவர்கள் கேட்கின்றனர். இதற்கு அதிமுகவும் ஒத்துப்போகிறது என குமரி பாஜவினர் குமுற தொடங்கியுள்ளனர்.


Tags : Kumari Baja , Constituency allotment for defeat?
× RELATED வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள்...