×

தமிழக சட்டப்பேரவை தேர்தலின்போது மின்னணு வாக்குப்பதிவின்போது வரும் ஒப்புகை சீட்டையும் எண்ண கோரி வழக்கு: கோரிக்கையை பரிசீலிக்க ஐகோர்ட் மறுப்பு

சென்னை: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்ததை அடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, வாக்காளர்கள், யாருக்கு, எந்த சின்னத்துக்கு வாக்களித்தனர் என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் விவிபிஏடி எனும் ஓட்டுக்கு ஒப்புகைச் சீட்டு காட்டும் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த மக்களவை தேர்தலில் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் பொருத்தப்பட்டன.தமிழகத்தில் எதிர்வர உள்ள சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கையின் போது, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஒப்புகைச் சீட்டுக்களை முழுமையாக எண்ணும்படி, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், வரும் சட்டப்பேரவை தேர்தலில்  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களில் ஒப்புகைச் சீட்டுகள் அனைத்தையும் எண்ண உத்தரவிட வேண்டும் எனவும் கோரியுள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ஏற்கனவே இதுசம்பந்தமாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போதைய நிலையில், இந்த விவகாரத்தில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. உரிய நேரத்தில் இந்த கோரிக்கையை மனுதாரர் எழுப்பலாம் எனவும் கூறிய நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.



Tags : TN Legislative election ,Icourt , Tamil Nadu Legislative Assembly during the election Case of seeking to count the acknowledgment slip received during electronic voting: Consider the request ICourt denial
× RELATED வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: ஐகோர்ட் மறுப்பு