×

டூல்கிட் விவகாரத்தில் திஷா பற்றி வெளியிட்ட செய்திகளில் பாரபட்சம்: டெல்லி உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்

புதுடெல்லி: டூல்கிட் விவகாரத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி குறித்து ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் பரபரப்பூட்டுபவையாகவும், பாரபட்சம் உடையதாகவும் இருப்பதாக டெல்லி உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக டிவிட்டரில் கருத்து தெரிவித்த ஸ்வீடன் நாட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பர்க் சர்ச்சைக்குரிய `டூல்கிட்’ ஒன்றை பகிர்ந்தார். இதன் மூலம், சர்வதேச அளவில் இந்தியாவின் பெயரை கெடுக்க சதி நடந்திருப்பதாக டெல்லி போலீசார் குற்றம் சாட்டினர். மேலும், காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் சதி திட்டத்திற்கு உதவியதாக பெங்களூரு சுற்றுச்சூழல் ஆர்வலரான திஷா ரவி, தேசத் துரோக வழக்கில் கைதானார். இதனிடையே, திஷா ரவி டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், டூல்கிட் செய்திகளை ஊடகங்களுக்கு வழங்க டெல்லி போலீசாருக்கு தடை விதிக்க கோரி இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பிரதீபா சிங்கிடம் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, `திஷா ரவி குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகள் பரபரப்பூட்டுபவையாகவும், பாரபட்சமானதாகவும் உள்ளன. அவரிடம் நடத்திய புலனாய்வு விசாரணை குறித்த செய்திகள் ஒளிபரப்பப்படாது என்பதை ஊடகங்கள் உறுதிப்படுத்த வேண்டும். அவை ஒளிபரப்பானால் அது விசாரணையை பாதிக்கும். டெல்லி போலீசும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளபடி, விசாரணை பற்றிய விவரங்களை வெளியிடாமல், சட்டத்துக்குட்பட்டு நடக்க வேண்டும்,’ என்று கூறி, திஷாவின் ஜாமீன் மனு நாளை (இன்று) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என தெரிவித்தார்.

3 நாட்கள் காவல் நீட்டிப்பு
திஷா ரவியிடம் டூல்கிட் தொடர்பான விசாரணை நடத்துவதற்காக டெல்லி போலீசார் எடுத்த 5 நாள் காவல் நேற்றுடன் முடிந்தது. இதனால், அவர் நேற்று டெல்லி போலீசாரால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, திஷா விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாகவும் சாந்தனு, நிகிதா உடனான விசாரணையின் போது அவரை மீண்டும் காவலில் எடுத்து கொள்வதாகவும் டெல்லி போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, அவரது நீதிமன்ற காவல் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டது.

Tags : Tulkit ,Tisha ,Delhi ,high court , Discrimination in news about Disha in Tolkien case: Delhi High Court strongly condemns
× RELATED டெல்லி அலிபூரில் உள்ள கார்னிவல் சொகுசு விடுதியில் பயங்கர தீ விபத்து..!!