×

கொடைக்கானல் ஏரியில் படகில் வாண வேடிக்கை நடத்தியதால் சர்ச்சை-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கொடைக்கானல் : கொடைக்கானல் ஏரியில் படகில் வாண வேடிக்கை நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நட்சத்திர ஏரி முக்கிய சுற்றுலாத்தலமாக உள்ளது. இங்கு படகு சவாரி, குதிரை சவாரி, சைக்கிள் ரைடிங் என சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாய் தங்கள் பொழுதை கழிப்பர்.

ஏரியில் படகுகளை இயக்குவதற்கு பல விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. ஆனால் அவற்றையெல்லாம் மீறி நேற்று முன்தினம் மாலை தமிழ்நாடு படகு குழாம் மூலம் இயக்கும் ஒரு படகு அலங்கரிக்கப்பட்டு, வாண வேடிக்கை நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

படகில் நடத்திய வாண வேடிக்கையால் ஏரியை புகை மண்டலம் சூழ்ந்ததுடன், தீ விபத்து ஏற்படும் அபாயம் இருந்தது. மேலும் இந்த தண்ணீர்தான் பழநி நகருக்கு குடிநீர் ஆதரமாக உள்ளது. அந்த குடிநீரை மாசுபடுத்தும்விதமாக வாண வேடிக்கை நடத்தியதாக புகார் எழுந்துள்ளது.

எனவே படகில் சென்ற அந்த விஐபிக்கள் யார், அவர்கள் மீது உடனடியாக கொடைக்கானல் நகராட்சியும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து படகு இல்ல மேலாளர் பூபாலனிடம் கேட்டபோது, ‘‘தனியார் ஓட்டல் நிர்வாகத்தில் இருந்து படகு வாடகைக்கு கேட்கப்பட்டது. அந்த படகு அலங்கரிக்கப்பட்டதும், வாண வேடிக்கை நடத்தியதும் எனக்கு தெரியாது. அப்படி அவர்கள் செய்தது நடவடிக்கைக்கு உரியதுதான்’’ என்றார்.

Tags : Kodaikanal Lake , Kodaikanal: There is a demand to take action against those who had boat fireworks on Kodaikanal lake.
× RELATED கொடைக்கானலில் நவீன இயந்திரம் மூலம் ஏரியில் தூய்மை பணி