நாடு முழுவதும் பாஸ்டேக் திட்டம் அமல் சுங்கச்சாவடி ஊழியர்களுடன் வாகன ஓட்டிகள் வாக்குவாதம்: நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்

சென்னை: தேசிய நெடுஞ்சாலைகளில் வேகமாகவும், பாதுகாப்பாகவும் பயணிக்கும் வகையில் சாலைகள் சர்வதேச தரத்துக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக வாகன ஓட்டிகளிடம் பணம் மற்றும் பாஸ்டேக் முறையில் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்நிலையில் பாஸ்டேக் மூலம் மட்டுமே கட்டணம் வசூலிக்கும் முறை, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. பாஸ்டேக் இல்லாதவர்களிடம் 2 மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதற்கு, வாகன ஓட்டிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக, போரூர் அருகே உள்ள வானகரம் சுங்கச்சாவடியில் பெரும்பாலான வாகனங்கள் பாஸ்டேக் இல்லாமல் வருவதால் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது.   

இதற்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, சுங்கச்சாவடி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில், பாஸ்டேக் உள்ளவர்களின் வாகனங்களும் சிக்கியது. இதன் காரணமாக, வேலைக்கு செல்வோர், வெளியூரிலிருந்து வரும் வாகனங்கள் தாமதமாக சென்றன. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு மேலும் அவகாசம் கொடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் தெரிவித்தனர். மேலும், பாஸ்டேக் திட்டம் வாடகை வண்டி ஓட்டும் தினக்கூலிகளுக்கு ஏற்றது அல்ல என வாடகை வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டினர். இதனால் பாஸ்டேக் இல்லாமல் வரும் வாகனங்களுக்கு கட்டணம் செலுத்த தனி லைன் ஏற்படுத்தி ரொக்கமாக கட்டணம் பெற வேண்டும் என்று கோரினர்.

* ஸ்ரீபெரும்பத்தூர் அருகே பென்னலூர்  சுங்கச்சாவடி மற்றும் செங்குன்றம் நல்லூரில், சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் காலை முதலே வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதன் காரணமாக, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்தன. மேலும், பாஸ்டேக் ஸ்கேன் செய்வதில் ஏற்படும் காலதாமதம் காரணமாகவும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

* சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செங்கல்பட்டு-பரனூர் சுங்கச்சாவடியிலும் பாஸ்டேக் நடைமுறை அமலுக்கு வந்த சிலமணி நேரங்களில் பாஸ்டேக் எடுக்காமல் வந்த வாகனங்களுக்கு இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. இருமடங்கு பணம் செலுத்த மறுத்து பல வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடி ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த செங்கல்பட்டு தாலூகா போலீசார் அவர்களை சமாதானம் செய்து அரசின் விதிமுறைகளை எடுத்துரைத்த பின்னரே, வாகன ஓட்டிகள் பணம் செலுத்தி விட்டு சென்றனர். இதனால் செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் பரபரப்பு நிலவியது.

Related Stories:

>