×

ஆறாக ஓடுகிறது மதுபானம்; குடியில் மூழ்கியது தமிழகம் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்: அரசுக்கு ஐகோர்ட் கிளை அறிவுறுத்தல்

மதுரை: தமிழகமே குடியில் மூழ்கி உள்ளது, மூலைமுடுக்கெல்லாம் மதுபானம் ஆறாக ஓடுகிறது, எனவே படிப்படியாக, பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமென தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை அறிவுறுத்தியுள்ளது. மதுரையைச் சேர்ந்த தாஹா முகம்மது, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், மதுரை - மேலூர் ரோட்டில் உலகநேரியில் ஒத்தக்கடை பெண்கள் மேனிலைப்பள்ளி அருகே, தட்டான்குளம் பிரதான சாலையில் டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. இந்த கடையால் மாணவியருக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. போக்குவரத்திற்கும் பெரும் இடையூறாக உள்ளது. எனவே, அந்த டாஸ்மாக் கடையை அகற்ற உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: பள்ளிக்கூடம் மற்றும் குடியிருப்பு பகுதிகளின் அருகில் வைப்பதற்கு, மதுபானக் கடைகள் ஒன்றும் புத்தகக் கடையோ, மளிகைக்கடையோ இல்லை. மது விற்பனை மூலம் அரசுக்கு வருமானம் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால் மாநிலமே மதுவால் குடியில் மூழ்கியுள்ளது குறித்து அரசு கவலை கொள்வதில்லை. ஆண்டுதோறும் அரசுக்கு மது விற்பனை மூலம் ரூ.30 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கிறது. ஆனால், மக்கள் நலன் மற்றும் பொது சுகாதாரத்திற்காக ரூ.90 ஆயிரம் கோடி செலவிடுகிறது. ஒரு ஆய்வறிக்கைப்படி, ஒட்டுமொத்த விற்பனையாகும் மதுபானத்தில் 13 சதவீதம் தமிழகத்தில் விற்பனையாவதாக தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் உள்ள ஆறுகளில் தண்ணீர் ஓடுகிறதோ இல்லையோ, மூலை முடுக்குகளில் எல்லாம் மதுபானம் ஆறாக ஓடுகிறது.  

பெண்கள் மற்றும் குழந்தைகளின் கண்ணீரைத் துடைத்திட, தமிழக அரசு படிப்படியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். இதை நீதிமன்றம் கூறுவதாக நினைக்காமல், ஒட்டுமொத்த சமூகத்தின் குரலாகவே இதை தமிழக அரசு பார்க்க வேண்டும். மதுவிலக்கை அமல்படுத்தினால் குற்றங்கள் குறையும். தனிநபர் வருமானம் உயரும். மது குடிப்பவர்களின் உடல்நிலை மற்றும் ஆரோக்கியம் அடைதல் உள்ளிட்ட பல நேர்மறையான முன்னேற்றங்களை காண முடியும். நீதிமன்றத்தின் இந்த யோசனைகளை தமிழக அரசு உற்றுநோக்கி கவனிக்கும் என கருதுகிறது. இந்த வழக்கைப் பொறுத்தவரை, பள்ளி அருகேயுள்ள டாஸ்மாக் மதுபான கடை பிப்.28க்கு பிறகு வேறு இடத்திற்கு மாற்றப்படும் என டாஸ்மாக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கடை மாற்றப்பட்டது குறித்து மார்ச் 1ல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தனர். தமிழகத்தில் உள்ள ஆறுகளில் தண்ணீர் ஓடுகிறதோ இல்லையோ, மூலை முடுக்குகளில் எல்லாம் மதுபானம் ஆறாக ஓடுகிறது.

Tags : Tamil Nadu ,government ,ICC , Flowing alcohol; Tamil Nadu should implement a complete ban on alcohol: ICC branch instruction to the government
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...