×

திருத்துறைப்பூண்டி தாலுகாவில் அறுவடை இயந்திரம் தட்டுப்பாட்டால் கொள்முதல் நிலையங்களில் பல லட்சம் நெல்மூட்டைகள் தேக்கம்

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி தாலுகாவில் கடந்த ஆண்டு 65 ஏக்கரில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்திருந்தனர். நிவர், நிரவி புயல், வடகிழக்கு தொடர் மழையால் சம்பா சாகுபடி செய்த வயல்கள் மழைநீர் தேங்கி அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் மழைநீரில் மூழ்கி முளைத்தும் பல இடங்களில் பயிர்கள் அழுகியது. இந்நிலையில் எஞ்சிய சம்பா அறுவடை கடந்த மாதம் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 60 சதவீதம் அறுவடை முடிந்துள்ளது. மேலும் ஒரே நேரத்தில் அறுவடை நடைபெற்று வருவதால் அறுவடை இயந்திரம் பெரும் தட்டுபாடு உள்ளதால் பகல், இரவு நேரத்திலும் அறுவடை நடைபெற்று வருகிறது என்று விவசாயிகள் தெரிவித்தனர். அறுவடை செய்த நெல் மூட்டைகள் கொள்முதல் செய்ய தாலுகா முழுவதும் 63 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இதுவரை சுமார் 6 லட்சம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. திருத்துறைப்பூணடி தாலுகாவில் கொக்கலாடி, சுந்தரபுரி, பள்ளங்கோவில், விளக்குடி உள்ளிட்ட 4ல் திறந்தவெளி சேமிப்பு கிடங்கு மற்றும் கோவிலூர், நிரந்தர குடோன். இதில் சுந்தரபுரி, விளக்குடி ஆகிய திறந்தவெளி சேமிப்பு கிடங்குகள், கோவிலூர் குடோன் திறந்து நெல்மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டு வருகிறது. தாலுகாவில் திறக்கப்பட்ட 63 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இதுவரை சுமார் 6 லட்சம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டதில் இரண்டு லட்சம் நெல்மூட்டைகள் மட்டும் திறந்தவெளி சேமிப்பு கிடங்கிற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

63 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டுவந்து வைத்துள்ள 10 லட்சம் முதல் 15 லட்சம் மூட்டைகள் கொள்முதல் செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. இது குறித்து திருத்துறைப்பூண்டி தாலுகா லாரி உரிமையாளர்கள் நலசங்க தலைவர் ஆறுமுகம், செயலாளர் அக்ரோ சீனிவாசன் கூறுகையில், 63 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எடுக்கப்பட்ட நெல் மூட்டைகள் திறந்த வெளி சேமிப்பு கிடங்குகளுக்கு ஏற்றிச்செல்ல 350க்கும் மேற்ப்பட்ட லாரிகள் இருந்தும் தினமும் 36 லாரிகள் மட்டுமே நெல்மூட்டைகள் ஏற்றி செல்கின்றனர். அதுவும் கோவிலூர் குடோனில் நெல்மூட்டைகளை இறக்கி வைக்க போதுமான தொழிலாளர்கள் இல்லை. இதனால் 3 நாட்களாக 20க்கும் மேற்ப்பட்ட லாரிகள் நிற்கிறது. நாள்தோறும் எடுக்கப்படும் மூட்டைகள் வெளியேற்றப்படாததால் புதிதாக வரும் விவசாயிகள் கொண்டுவரும் நெல்மூட்டைகளை எடுக்க இயலாமல் கொள்முதல் நிலைய அலுவலர்கள் தவித்து வருகின்றனர். பாதுகாக்கவும் முடியவில்லை. குறிப்பாக வேளூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட 7 ஆயிரம் நெல்மூட்டைகள் உள்ளது.

கொள்முதல் செய்யாமல் 5 ஆயிரம் நெல் மூட்டைகள் உள்ளன. இது மாதிரிதான் அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் உள்ள நிலைமை ஆகும். கொள்முதல் செய்யப்பட்ட 7 லட்சம் நெல் மூட்டைகள் திறந்தவெளி சேமிப்பு கிடங்கிற்கு எடுத்து செல்லாமல் உள்ளது. அனைத்து கொள்முதல் நிலையத்திலும் சுமார் 15 லட்சம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்ய விவசாயிகள் கொண்டுவந்து வைத்துவிட்டு பல நாட்களாக காத்துக்கிடக்கின்றனர். எனவே கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை எடுத்துச் சென்று இருப்பு வைக்க மேலும் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்குகளை திறக்கவும், தேவையான தொழிலாளர்கள், பாதுகாவலர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Thiruthuraipoondi ,procurement centers , Lakhs of paddy bales stagnant in purchasing centers due to shortage of harvesting machine in Thiruthuraipoondi taluka
× RELATED திருத்துறைப்பூண்டியில் டூவீலரில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது