ஊராட்சி தலைவர் எதிர்ப்பு தெரிவித்ததால் முதியவர் உடலை அடக்கம் செய்வதில் தகராறு

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே பாணவேடுதோட்டம் ஊராட்சியில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு, அமமுகவை சேர்ந்த சிவசங்கர் ஊராட்சி தலைவராக உள்ளார். இங்கு வசிக்கும் சரவணன்(34) என்பவர் வங்கியில் மேலாளராக வேலை செய்து வருகிறார். இவரது தந்தை லோகநாதன்(63) உடல்நல குறைவால் இரு தினங்களுக்கு முன் இறந்தார். இதையடுத்து அவரது சடலத்தை ஊராட்சிக்கு உட்பட்ட மயானத்தில் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடு நடந்தது. மயானத்தில் குழி தோண்டப்பட்டு, நேற்று முன்தினம் மாலை இறுதி ஊர்வலம் நடந்தது. இந்நிலையில், மயானத்தில் லோகநாதன் சடலத்தை புதைக்க ஊராட்சி தலைவர் சிவசங்கர் எதிர்ப்பு தெரிவித்து இறுதி ஊர்வலத்தை தடுத்து நிறுத்தி, “இறந்தவர் வெளியூரை சேர்ந்தவர். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தகவல் வந்துள்ளது.

அப்பகுதி குடியிருப்பை சேர்ந்தவர்கள் ஊராட்சிக்கு வரி செலுத்தவில்லை” என கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பூந்தமல்லி போலீசில் புகாரும் கொடுத்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்ததும் பூந்தமல்லி வருவாய்துறை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சிவசங்கர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் சடலத்தை நீண்ட நேரம் சாலையோரம் வைத்திருந்தனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் பொறுமை இழந்த சரவணன், 3 மணி நேரத்துக்கு பின் போரூர் மின் மயானத்தில் சடலத்தை தகனம் செய்ய முடிவு செய்தார். இதையடுத்து தங்களது சடங்குகளை மாற்றி கொண்டு 10 கிமீ தூரமுள்ள போரூர் மயானத்திற்கு சடலத்தை எடுத்துச் சென்று தகனம் செய்தனர்.

Related Stories:

>