×

வெற்றி பெற்றால் மத்திய அமைச்சர்: குமரியை குறிவைக்கும் பாஜக விஐபிக்கள்!

நாகர்கோவில்: தமிழகத்தின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் எப்போதுமே தேசிய நீரோட்ட அரசியல் அமைந்து உள்ளது. மற்ற மாவட்டங்களில் எல்லாம் உதயசூரியனும், இரட்டை இலையும் மாறி, மாறி போட்டி போட, இங்கு தாமரையும், கை சின்னமும் தான் பிரதான சின்னங்களாக இருக்கும். வர இருக்கிற சட்டமன்ற தேர்தலுடன், கன்னியாகுமரி நாடாளுமன்றத்துக்கான இடைத்தேர்தலும் நடக்க இருக்கிறது.

இந்த தொகுதி எம்.பி.யாக இருந்த வசந்தகுமார், மரணம் அடைந்ததை தொடர்ந்து இடைத்தேர்தல் வர போகிறது. காங்கிரசை பொறுத்தவரை கடைசி வரை வேட்பாளர் யார்? என்பதில் பரபரப்பு நீடித்து, ஒரு கட்டத்தில் அறிவிப்பு வெளியாகும். ஆனால் பாரதிய ஜனதாவிலும் அந்த பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் என்றாலே முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தான் வேட்பாளர் என்பதை அடித்து சொல்லி விடலாம். (நாகர்கோவில் சட்டமன்ற  தொகுதியிலும் இவர் போட்டியிட்டு தோல்வி அடைந்திருக்கிறார். அது வேற கதை)

ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ. சார்பில் முன்னிறுத்தப்படும் வேட்பாளர் பொன்னார் தான். ஆனால் இந்த இடைத்தேர்தலில் பொன்னாருக்கு கடும் போட்டி இருக்குமோ? என்ற பரபரப்பு பா.ஜ.வுக்குள் ஏற்பட்டுள்ளது. பொன்.  ராதாகிருஷ்ணனுக்கும் இந்த பதற்றம் இருப்பதை அவருடன் நெருங்கி பழகியவர்கள் பார்த்து உணர்ந்துள்ளனர். ஆனால் எதையும் அவர் வெளிகாட்டவில்லை. நாடாளுமன்ற இடைத்தேர்தலும் இருமுனை போட்டியே இங்கு உச்சம் பெறும். மும்முனை போட்டி என்றால் களத்தில் போராடலாம். இருமுனை போட்டி என்றால் சந்தேகம் தான் என்பது பா.ஜ.வினருக்கே தெரியும்.

இந்த முறை மத்தியில் பா.ஜ. ஆட்சி இருக்கிறது. பொன். ராதாகிருஷ்ணன் அல்ல, பா.ஜ. வேட்பாளர் யார்? வெற்றி பெற்றாலும் அவர்கள் மத்திய அமைச்சர் தான். எனவே மக்கள் இந்த முறை பா.ஜ.வுக்கு வாக்களித்து, தங்கள் தொகுதிக்கு ஒரு மத்திய அமைச்சரை பெற்றுக் கொள்வார்கள் என்பது பா.ஜ.வினரின் கணக்கு. ஆகவே கடந்த தேர்தல்களை விட இந்த முறை சீட் கேட்பவர்களின் எண்ணிக்கை அதிகமாம். வெளியூர் பாஜ விஐபிக்களும் கன்னியாகுமரி தொகுதியை குறிவைத்து காய்களை நகர்த்தி வருகின்றனர். ஆகவே எப்படியும் இந்த முறை சீட் பெற்று விட வேண்டும் என்பது தான் பொன்னாரின் கணக்காகும். கட்சி தலைமை என்ன கணக்கு போடுகிறதோ? வாக்காளர்கள் கணக்கு என்னவாக இருக்குமோ? என்பது இனிவரும் நாட்களில் தெளிவாகும்.

Tags : Union Minister ,BJP ,VIPs ,Kumari , Union Minister if successful: BJP VIPs targeting Kumari!
× RELATED சொத்து விவரங்கள் மறைத்த ஒன்றிய...