×

தங்கம் ரேஞ்சுக்கு பவுசு காட்டும் சின்ன வெங்காயம்... ஒரு கிலோ ரூ. 170க்கு விற்கப்படுவதால் வெங்காயம் போடாமல் சாம்பார் வைக்க இல்லத்தரசிகள் முடிவு!!

கோவை : தமிழகத்தில் பருவம்தப்பி பெய்த மழையால் விளைச்சல் குறைந்ததால் சின்ன வெங்காயம் விலை கடந்த 10 நாட்களில் இரு மடங்காக உயர்ந்துள்ளது.திண்டுக்கல் வெங்காய மார்க்கெட்டுக்கு சின்ன வெங்காயம் வரத்து பாதிக்கும் மேல் குறைந்துள்ளது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 8000 மூட்டைகள் விற்பனைக்கு வந்த சின்ன வெங்காயம், அப்போது 2000 மூட்டைகள் வரையே வந்துள்ளது. இதன் காரணமாக கடந்த மாதம் 60ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ சின்ன வெங்காயம், தற்போது ரூ. 145 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் சில்லறை விற்பனையில் சின்ன வெங்காயம் ரூ.160க்கும் விற்பனை செய்யப்படுகிறது. திருச்சியில் ரூ.120, கோவையில் ரூ.170, கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.130க்கும் சின்ன வெங்காயம் விற்பனையாகிறது.

அதிக மழை காரணமாக விளை நிலங்களில் வெங்காயம் அழுகிவிட்டதே விலை உயர்வுக்கு காரணம் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது நடவு செய்யப்பட்டுள்ள சின்ன வெங்காயம் விற்பனைக்கு வரும் வரை இந்த விலையேற்றம் இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் சரக்கு லாரிகள் கட்டணத்தை உயர்த்துதலும் வெங்காயம் விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. பெரிய வெங்காயம் ஒருகிலோ ரூ.50வரை விற்கப்படும் நிலையில் சின்ன வெங்காயத்தின் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சமையலுக்கு அத்தியாவசியமான சின்ன வெங்காயம் விலை உயர்ந்திருப்பது இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. வெங்காயம் போடாமல் சாம்பார் வைப்பது எப்படி என்று யோசித்துக் கொண்டிருக்கின்றனர் இல்லத்தரசிகள்.

Tags : showing ,Housewives , வெங்காயம்
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை… தீபாவளி...