×

“நெகிழ வைக்கும் ஒரு உண்மை காதல்” ராயக்கோட்டையில் தமிழகத்தின் தாஜ்மஹால்

கிருஷ்ணகிரி: “ஐ லவ் யூ மெகருன்னிஸா... நாம் திருமணம் செய்து கொள்ளலாமா” என கேட்டதும் திகைத்து போனாள் மெகருன்னிஸா. எதிரில் நிற்பவன் குளோவர். கிழக்கிந்தியக் கம்பெனியின் மதராஸ் ரெஜிமென்ட்டுக்கு கேப்டனாக இருந்தவன். மெகருன்னிஸா சாதாரண படைவீரனின் மகள். அவள் எப்படி ஒரு ஆங்கிலேயத் தளபதியை மணம் செய்து கொள்ள முடியும். குளோவரின் வார்த்தைகள், தடைகளை கிழித்துக்கொண்டு காதலை மேலெழுந்து துளிர்க்கச் செய்துவிட்டன. சரித்திரம் போற்றிப் பாராட்டுகிற எல்லா காதலர்களை விடவும் அன்பிலும், பண்பிலும் நின்றவர்கள் குளோவர்- மெகருன்னிஸா காதல் ஜோடி.

காதலின் சின்னமென்றால் தாஜ்மஹால் தான் நினைவுக்கு வரும். அதைப் போலவே கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை மலையின் அருகில், தன் காதல் மனைவி மெகருன்னிஸாவுக்கு ஒரு காதல் நினைவுச் சின்னத்தை கட்டியெழுப்பியிருக்கிறான் குளோவர். தர்மபுரி -ஓசூர் சாலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராயக்கோட்டை மலையைச் சுற்றியுள்ள கிராமம். இயற்கையே அளவெடுத்து நெய்த இக்கோட்டை பிரிட்டிஷ் காலத்தில் மிக முக்கிய பாதுகாப்புக் கேந்திரமாக விளங்கியது. கோட்டைக்கு கீழே, தென்பெண்ணை நதியின் சாரல் தொடும் தூரத்தில் வெண்ணிறத்தில் விண்ணோக்கி நிற்கிறது குளோவர் கட்டிய தாஜ்மஹால். பராமரிப்பின்றி சிதைவுகளோடு இருந்தாலும், அந்தச் சூழல் நம்மை பரவசத்தில் ஆழ்த்துகிறது.
கிறிஸ்தவரான குளோவர், இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த தன் மனைவியின் நினைவாக, அவளின் மத நம்பிக்கைகள் குலையாமல் கட்டியெழுப்பிய நினைவுச் சின்னமே அவனது இணையற்ற காதலுக்கு சான்றாக இருக்கிறது. ராயக்கோட்டையை திப்பு சுல்தானிடமிருந்து பிரிட்டிஷ்காரர்கள் கைப்பற்றினர்.

மதராஸ் ரெஜிமென்ட்டின் தலைவனாக இருந்த மேஜர் ஜான் காம்பெல் குளோவரை ராயக்கோட்டையின் தலைவராக நியமித்தது பிரிட்டிஷ் தலைமை. மெகருன்னிஸாவின் தந்தை ஆஹா ஜமாலுதீன், திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலியின் படையில் வீரனாக இருந்தவன். ராயக்கோட்டையை ஆங்கிலேயர் கைப்பற்றிய பிறகு, பிரிட்டிஷ் படையில் இணைக்கப்பட்டவன்.  ராயக்கோட்டை மலையின் மேல், குளோவரின் மஹாலுக்கு அருகிலேயே இவனது குடும்பத்துக்கும் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த நெருக்கமே குளோவருக்கும், மெகருன்னிஸாவுக்கும் காதலைப் பற்ற வைத்தது. மெகருன்னிஸா ஒரு கிறிஸ்தவனை மணம் முடிப்பதை அவளது உறவினர்கள் ஏற்கவில்லை.

மெகருன்னிஸா தன் காதலில் உறுதியாக இருந்தாள். எல்லாம் சுபமாக நகர்ந்த வேளையில் இரண்டாம் பர்மா போர் 1852ல் தொடங்கியது. வீரத்திற்குப் பெயர் போன குளோவரையே அப்போருக்கு தலைமையேற்க பணித்தது பிரிட்டிஷ் தலைமை. அப்போரில் குளோவரைக் குறி வைத்துத் தாக்கியது பீரங்கி குண்டு. அதில் ஒரு கை நீக்கப்பட்டது. பெரும் சிதைவுகளோடு களத்திலிருந்து ராயக்கோட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டான் குளோவர். கணவனின் நிலையறிந்து துடித்துப் போனாள் மெகருன்னிஸா. அந்தக் கவலை அவளை தீரா நோயில் தள்ளியது. இன்பம் தவழ்ந்த அந்தக் காதல் தம்பதியின் வாழ்க்கையை துயரம் கவ்வியது. ஒரு கொடிய நாளில் குளோவரைத் தவிக்கவிட்டு, நீங்காத் துயில் கொண்டாள் மெகருன்னிஸா. அந்த இழப்பை ஏற்க முடியாமல் தவித்தான். காதல் மனைவிக்கு நினைவுச் சின்னம் ஒன்றை எழுப்ப நினைத்தான்.

அதற்காக வட இந்தியாவில் இருந்து சிற்பிகளை வரவழைத்து, அவளை அடக்கம் செய்த இடத்தில் அற்புதமான வேலைப்பாடுகளுடன் ஒரு மண்டபம் கட்டியெழுப்பினான். தனது  இருப்பிடமான பஞ்சப்பள்ளியில் இருந்து தினந்தோறும் அதிகாலை நடந்தே வந்து இந்த நினைவுச் சின்னத்தின் அருகில் அமர்ந்திருப்பது அவனது அலுவலாகிப் போனது. நாளடைவில் ராயக்கோட்டையில் இருந்து 10 கி.மீ., தொலைவில் உள்ள ஜக்கேரி என்னுமிடத்தில் ஆலமரத்துக்கு அருகில் சிறு குடிசை கட்டி குடியேறினான். 1876ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்த இடத்திலேயே உயிரிழந்தான். ராயக்கோட்டை மலையில் எதிரிகளின் குண்டுகள் துளைக்க முடியாத கடும் பாறைகளுக்கு மத்தியில், தன் காதல் மனைவிக்காக குளோவர் கட்டியெழுப்பிய மஹால் மட்டும் சிறிதும் சிதைவில்லாமல் இப்போதும் இருக்கிறது.

காதலின் சின்னமென்றால் தாஜ்மஹால் தான் நினைவுக்கு வரும். அதைப் போலவே கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை மலையின் அருகில், தன் காதல் மனைவி மெகருன்னிஸாவுக்கு ஒரு காதல் நினைவுச் சின்னத்தை கட்டியெழுப்பியிருக்கிறான் குளோவர்.

Tags : Taj Mahal ,Rayakottai ,Tamil Nadu , “Flexible, true love, the Taj Mahal of Tamil Nadu
× RELATED பச்சை மிளகாய் சாகுபடி அதிகரிப்பு