அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக அதிகரிக்க முடிவு: 63.55 லட்சம் இளைஞர்களின் வேலைவாய்ப்பு முன்னுரிமை பறிபோகும்..! சமூக ஆர்வலர்கள் கருத்து

அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 60 ஆக அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதன் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள 63.55 லட்சம் படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்பு முன்னுரிமை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். தமிழக அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்து வந்தது. இந்தநிலையில் நிதி பற்றாக்குறை காரணமாக ஓய்வு பெறும் வயது கடந்த ஆண்டு 59 ஆக உயர்த்தப்பட்டது. இதற்கு சிலர் எதிர்ப்பும், சிலர் ஆதரவும் தெரிவித்தனர். ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பதன் மூலம் பதவி உயர்வு பெற முடியாது எனவும், அதற்கேற்ற சம்பள உயர்வும் பெற முடியாது எனவும் குற்றம்சாட்டினர். மேலும், ஓய்வு பெறுவோருக்கு ஓய்வூதியம் மற்றும் பணப்பலன்கள் அரசின் சார்பில் வழங்கப்படும்.

தற்போது தமிழக அரசு 4 லட்சம் கோடி கடன் சுமையில் உள்ளது. இந்த சூழலில் ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பணப்பலன்களை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனாலேயே ஓய்வு பெறும் வயது 58ல் இருந்து 59 ஆக உயர்த்தியது. இந்த நிலையில் மீண்டும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வூதிய வயதை 59ல் இருந்து 60 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம், அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பணப்பலன்கள் வழங்க இந்த ஆண்டுக்கு தேவையான ரூ.10 ஆயிரம் கோடி மிச்சமாகும். நிதி பற்றாக்குறை இருப்பதால், ஓய்வூதியம் மற்றும் பண பலன்களை வழங்கும் தொகையை இரண்டு  ஆண்டுகளுக்கு மிச்சப்படுத்தப்படும் என்று தமிழக அரசு கணித்துள்ளது.

ஆனாலும், அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 60 ஆக உயர்த்துவதன் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வைத்துள்ள படித்த இளைஞர்கள் முன்னுரிமை பறிபோகும் நிலை எழுந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய பணப்பலன்கள் வழங்க தேவையான பணத்தை மிச்சம் செய்வதற்காக அரசு ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்த முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அரசு ஊழியர்கள் தங்களின் பணியில் முன்னுரிமை மற்றும் பதவி உயர்வு பெறுவது தடைபடும். குறிப்பாக, ஓராண்டுக்கு ஒரு ஊழியரால் எந்தவித பதவி உயர்வும் பெற முடியாது. பதவி உயர்வில் பின்தங்கும் நிலை உருவாகும். இதேபோல், சம்பள உயர்வும் அவர்களால் பெற முடியாது.

இது ஒருபுறம் இருக்க படித்து வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து அரசு வேலைக்காக காத்திருக்கும் 63 லட்சம் பேருக்கு அரசு வேலை கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் கிட்டத்தட்ட 5 லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த சூழலில் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது படித்த இளைஞர்களின் கனவை சிதைத்துவிடும். குறிப்பாக, 35 வயதுக்குள் அரசு வேலையை பெற்றுவிடலாம் என்று நினைப்பவர்களின் கனவு மெய்படாமல் போகும். அரசின் இந்த அணுகுமுறை பல்வேறு பிரச்னைகளுக்கு காரணமாக அமைந்துவிடும். இவர்களை தவிர்த்து அரசு துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவோரும் இதனால் பாதிக்கப்படுவார்கள். மேலும், 60 வயதில் ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு அவர்களுடைய ஓய்வூதியம் முழுமையாக கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories:

>