×

அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்ட பணிகளை தொடங்குவதில் சிக்கல்: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவதாக இருந்த நிலையில் கடைசி நேரத்தில் தள்ளி வைப்பு

சென்னை: காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்ட பணிக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுவதாக இருந்த நிலையில் நிலம் கையகப்படுத்துவதில் தாமதம், சுற்றுச்சூழல் அனுமதி பெறாததால் கடைசி நேரத்தில் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பருவமழை காலகட்டங்களில் மேட்டூர் அணை நிரம்பி ஒவ்வொரு ஆண்டும் காவிரி ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால், பல நூறு டிஎம்சி நீர் வீணாக கடலில் கலக்கிறது. இவ்வாறு வீணாகும் தண்ணீரை விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தும் வகையில் காவிரி-அக்னியாறு-தெற்கு வெள்ளாறு-மணிமுத்தாறு-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின்படி 14 ஆயிரம் கோடி செலவில் 260 கி.மீ தூரம் கால்வாய் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி முதற்கட்டமாக காவிரி முதல் தெற்கு வெள்ளாறு (118 கிலோ மீட்டர்) வரை, இரண்டாவது கட்டமாக தெற்கு வெள்ளாறு முதல் வைகை (108 கிலோ மீட்டர்) வரையும், மூன்றாவது கட்டமாக வைகை முதல் குண்டாறு (33 கிலோ மீட்டர்) வரை மேற்கொள்ளப்படுகிறது.இந்த திட்டத்துக்காக முதற்கட்டமாக கரூர் மாவட்டம் மாயனூரில் உள்ள கட்டளை கதவணையில் தொடங்கி திருச்சி மாவட்டம் வழியாக புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு வெள்ளாறு வரைக்கும் 1321.68 ஏக்கர் பட்டா நிலமும், 346.69 ஏக்கர் புறம்போக்கு நிலமும் கையகப்படுத்த வேண்டியுள்ளது. இதற்காக, 1486 கோடி நிதியின் மூலம் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக அடுத்த மாதம் அறிவிக்க வாய்ப்புள்ளது. எனவே, காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தில் முதற்கட்டமாக 7763 கோடியில் காவிரி முதல் தெற்கு வெள்ளாறு வரை இணைப்பு பணிகளுக்கு தமிழகம் வரும் பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இந்த திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணியும் முழுமையாக முடிவடையவில்லை. இப்பணிகள் முடிந்தால் மட்டுமே தேசிய நீர் மேம்பாட்டு முகமை நிதியை பெற தமிழக அரசால் நடவடிக்கை எடுக்க முடியும். மேலும், சுற்றுச்சூழல்த்துறையிடம் தடையில்லா சான்று பெற வேண்டும். அதன்பிறகு இத்திட்டத்தை செயல்படுத்த முடியும். இந்த நிலையில் இந்த திட்டம் தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் பிப்ரவரி 25,26 ஆகிய தேதிகளில் நடக்கிறது. பிறகு சுற்றுச்சூழல் துறை அனுமதி கேட்டு அனுப்ப முடியும். இந்த திட்டத்தை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினாலும் இப்பணிகளை செயல்படுத்த முடியாது. இந்த சூழலில் இப்பணிகளுக்கு கடைசி நேரத்தில் அடிக்கல் நாட்டும் விழா தள்ளி வைக்கப்பட்டு இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் மார்ச் முதல்வாரத்தில் பேரவை தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில், காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை அதிமுக ஆட்சியில் செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.



Tags : Cauvery ,Modi , Problems in launching Cauvery-Vaigai-Gundaru link project due to negligence of officials
× RELATED தமிழ்நாட்டுக்கு 2.5 டிஎம்சி காவிரி நீரை...