ராகுல் குற்றச்சாட்டு சரிதானா? லடாக் எல்லையை பார்வையிட செல்கிறது நாடாளுமன்ற குழு

புதுடெல்லி: நாடாளுமன்ற நிலைக்குழு லடாக் எல்லையை நேரில் பார்வையிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கிழக்கு லடாக் எல்லையில் சீன ராணுவம் செய்துள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்பாக, 9 மாதங்களுக்கும் மேலாக இந்தியா-சீனா இடையே போர் பதற்றம் நீடிக்கிறது. அதே நேரம், 9ம் கட்ட பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட ஒப்பந்தப்படி, பாங்காங் திசோ ஏரி பகுதியில் இருந்து இருநாட்டு ராணுவமும் வாபஸ் பெறப்பட்டு வருகிறது. ஆனால், இப்பகுதியில் இந்திய பகுதிகளை சீனாவுக்கு விட்டுக் கொடுத்து விட்டு இந்திய படைகள் திரும்புவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இதை பாதுகாப்பு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்நிலையில், ராகுலின் குற்றச்சாட்டு உண்மைதானா என்பதை அறிய, லடாக்கின் அசல் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை நேரில் சென்று பார்வையிட, நாடாளுமன்ற நிலைக்குழு முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக, 30 உறுப்பினர்கள் அடங்கிய நாடாளுமன்ற குழு ஆலோசனை நடத்தியுள்ளது. வரும் மே அல்லது ஜூனில் பாஜ தலைவர்களில் ஒருவரும், மத்திய அமைச்சருமான ஜுவல் ஒரம் இக்குழுவுக்கு தலைமை தாங்கி அழைத்துச் செல்வார் என்றும் கூறப்படுகிறது.

ராகுல் செல்வாரா?

நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக ராகுல் காந்தியும் இருக்கிறார். ஆனால், இதன் ஆலோசனை கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை. இதனால், நாடாளுமன்ற நிலைக்குழுவுடன் அவர் லடாக் செல்வாரா அல்லது புறக்கணிப்பாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Related Stories:

>