×

வனத்தில் இருந்து ஊருக்குள் வருவது அதிகரிப்பு: தமிழகத்தில் 6 ஆண்டில் 561 யானைகள் உயிரிழப்பு

சேலம்: தமிழகத்தில் மட்டும் கடந்த 6 ஆண்டுகளில் 561 யானைகள் உயிரிழந்துள்ளது. இத்தகவலை தமிழக வனத்துறை, வன உயிரின ஆர்வலர் ஆண்டனி ரூபினி என்பவர் கேட்ட தகவல் அறியும் உரிமை சட்ட கேள்விக்கு பதிலாக  தெரிவித்துள்ளது. கடந்த 2015ல் இருந்து 2020 செப்டம்பர் வரையில் கோவை வன மண்டலத்தில் 134 யானைகளும், ஈரோடு வன மண்டலத்தில் 167 யானைகளும், தர்மபுரி வன மண்டலத்தில் 89 யானைகளும் இறந்திருக்கிறது. இவற்றில் 161  யானை குட்டிகளும் அடக்கம். காட்டிற்குள் இருந்து உணவு தேடி வரும் யானைகளில், பெரும்பாலானவை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது. சில யானைகள் மட்டும் வேட்டையாடப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. கடந்த மாதம் நீலகிரி  மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தின் மசினகுடி பகுதியில் தனியார் தங்கும் விடுதி அருகே வந்த யானை மீது 2 பேர், டயரில் தீயை பற்ற வைத்து தூக்கி வீசியதும், அது யானையின் காது பகுதியில் மாட்டி எரிந்து, உயிரிழந்ததும்  பரபரப்பை ஏற்படுத்தியது.

தர்மபுரி வன மண்டலத்தை பொருத்தளவில் தேன்கனிக்கோட்டை, சூளகிரி, ஒசூர் பகுதியில் சாலைகளையும், ரயில்வே தண்டவாளத்தையும் அடிக்கடி யானைகள் கடக்கின்றன. அப்போது, விபத்தில் சிக்கி உயிரிழக்கிறது. அதேபோல்,போதிய  உணவு கிடைக்காமல் காட்டிற்குள் யானைகள் உயிரிழப்பதும் அதிகரித்து வருகிறது. ஈரோடு வன மண்டலத்தின் எல்லையாக கருதப்படும் பாலமலை பகுதியில் சமீபத்தில் ஒரு ஆண் யானை, மின் வேலியில் சிக்கி உயிரிழந்தது. இதுபற்றி வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘யானைகள் இறப்பை தடுக்க வனப்பரப்பு அதிகரிப்பு மற்றும் உணவு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் குட்டைகள், தொட்டிகள் கட்டப்பட்டு வருகிறது. யானைகளை வேட்டையாடுவதை  வனத்துறை தடுத்திருக்கிறது. அதனால், வருங்காலங்களில் யானைகள் உயிரிழப்பு பெரிதும் குறையும்,’’ என்றனர்.

Tags : Tamil Nadu , Increase in forest migration: 561 elephants die in 6 years in Tamil Nadu
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து