×

எருக்கூர் அரிசி ஆலைக்கு கொண்டு செல்லாததால் நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம்

கொள்ளிடம்: எருக்கூர் அரிசி ஆலைக்கு கொண்டு செல்லாததால் கொள்ளிடம் பகுதி நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் எடை குறைய வாய்ப்புள்ளதால் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் கடந்த மாதம் 25ம் தேதி நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. கொள்ளிடம் மற்றும் சீர்காழி பகுதியில் மட்டும் 55 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு சம்பா நெல் மூட்டைகள் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகள் ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலைய வளாகத்திலேயே அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளை லாரிகள் மூலம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு சொந்தமான எருக்கூரில் உள்ள நவீன அரிசி ஆலைக்கு லாரிகள் மூலம் எடுத்து செல்வது வழக்கம். ஆனால் இந்தாண்டு கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த நெல் மூட்டைகளை லாரிகள் இதுவரை நவீன அரிசி ஆலைக்கு ஏற்றி செல்லவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடி கொள்முதல் நிலையங்களில் அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. மேலும் நெல் மூட்டைகளை அடுக்கி வைக்க இடம் இல்லாமல் போகும் என்பதால் கொள்முதல் செய்யும் பணி தற்போது குறைந்துள்ளது.

சில கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்வது கடந்த 3 நாட்களாக முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை எடுத்து வந்து கொள்முதல் செய்யாததால் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு அதிக மழை காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டு அவர்களுக்கு கிடைக்கிற நெல் மூட்டைகளும் குறைவாகவே உள்ளன. இருந்தும் தற்போது அறுவடை செய்துள்ள நெல் மூட்டைகளை எளிதில் விற்பனை செய்ய முடியாத நிலையில் இருந்து வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு நெல் மூட்டைகளை ஏற்றி செல்ல வரும் லாரிகள் ஒரு மூட்டைக்கு ரூ.7 வீதம் மாமூல் கேட்பதாகவும், அதை தருவதற்கு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மறுப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் நெல் மூட்டைகள் ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் 10,000 முதல் 13,000 மூட்டைகள் வரை அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. நெல் மூட்டைகளை ஏற்றி செல்லாமல் அப்படியே அடுக்கி வைக்கப்பட்டால் எடை குறைய வாய்ப்புள்ளது அப்படி குறைந்தால் அதை நேரடி நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் ஏற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

நெல் ஒரு கிலோ ரூ.20 வீதம் கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டையில் ஒரு கிலோ வீதம் எடை குறைந்தாலே 10,000 மூட்டைக்கு ரூ.2 லட்சம் வீதம் இழப்பு ஏற்படலாம். கடந்தாண்டை விட இந்தாண்டு லாரி வாடகையை அரசு ரூ.30 சதவீதம் உயர்த்தி வழங்கியும் நெல் மூட்டைகளை ஏற்றி செல்ல மறுத்து தனியாக மாமூல் கேட்டு வருகின்றனர் என்றனர்.

எனவே உடனடியாக நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யவும், லாரிகள் மூலம் கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் மூட்டைகளை எடுத்து செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : rice mill , Paddy bundles
× RELATED ரைஸ் மில் உரிமையாளர் வெட்டிக்கொலை