×

கோவில் திருவிழா தடையின்றி நடைபெற உதவிய இஸ்லாமிய சகோதரர்கள்: களக்காட்டில் மத நல்லிணக்கத்திற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு

நாகர்கோயில்: களக்காடு தாஜ் பேக்கரி உரிமையாளர் மறைந்த இஸ்மாயில் அவர்களின் மனைவியும் தாஜ் உசேன் சகோதரர்களின் தாயாருமான இப்ராகிம் அம்மாள் (78) அவர்கள் (12.02.2021) காலை 7 மணியளவில் இயற்கை எய்தினார்கள். இந்த நிலையில் இன்று களக்காடு ஸ்ரீ சத்தியவாகீஸ்வரர் கோமதி அம்பாள் கோவில் தெப்பத்திருவிழா நடைபெறயிருப்பதாலும் இதற்காக சாமி ரதவீதி வழியாக செல்லவேண்டியிருந்தது. தாஜ் உசேனின் வீடு ரத வீதிக்குள் இருந்ததால் சாமி வர முடியாத நிலை ஏற்படும் நிலை உருவானது.

அதேவேளையில் உசேனின் சகோதரி சென்னையிலிருந்தும் ஒரு சகோதரன் ஆந்திராவிலிருந்தும் வரவேண்டி இருப்பதால் தாயாரின் நல்லடக்கம் இன்று நடைபெறும் என தெரிவித்ததால் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் விழா குழுவினர் தாஜ் சகோதரர்களிடம் நிலைமையை தெரிவித்தனர். உசேன் சகோதரர்களும் நிலைமையை அறிந்து சாமி செல்லும் வரை தாயாரின் உடலை ரதவீதிக்கு வெளியே சுகம் மருத்துமனையில் 3 மணி முதல் ஆறு மணி வரை இடம் மாற்றி வைத்தனர்.

சாமி ரத வீதியை கடந்த பிறகு உசேன் சகோதரர்கள் தாயாரின் உடலை மீண்டும் வீட்டிற்கு கொண்டு வந்தனர். இதனால் கோவில் தெப்பத்திருவிழாவும் தடையின்றி நடைபெற்றது. கோவில் தெப்பத்திருவிழா தடையின்றி நடைபெற உதவிய தாஜ் உசேன் சகோதரர்களையும் சுகம் மருத்துவமனை மருத்துவர் டாக்டர் ஆதம் சேக் அலி அவர்களையும் அனைவரும் பாராட்டினர். இந்த செயல் களக்காட்டில் மத நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

Tags : Islamic Brotherhood ,temple festival ,jungle , Religious Reconciliation
× RELATED தருவைக்குளம் புனித ஜெபமாலை ஆலய திருவிழாவில் அசன விருந்து